

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் விரல் சிகிச்சையின் போது துண்டான விவகாரம் தொடர்பாக, மருத்துவக் கல்லூரி துறை இயக்குநர் பதிலளிக்க, மாநில மனித உரிமை ஆணையம், ‘நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
தஞ்சாவூரை அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(34) விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி(20). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மே 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு வயிற்றில் குறைபாடு இருந்ததால், குளுக்கோஸ் செலுத்துவதற்காக, குழந்தையின் கையில் வென்பிளான் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தக் குழந்தை ஜூன் 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.
அப்போது, அந்தக் குழந்தையின் கையில் இருந்த வென்பிளானை அகற்ற செவிலியர் ஒருவர் கத்திரிக்கோலால் நறுக்கிய போது, குழந்தையின் கட்டை விரல் துண்டானது.
இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், மருத்துவக் கல்லூரி துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், ‘குழந்தையின் விரல் துண்டான சம்பவம் குறித்து, 2 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.