சென்னையில் உட்புற சாலைகளை மேம்படுத்த ரூ.121 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் உட்புற சாலைகளை மேம்படுத்த ரூ.121 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
Updated on
1 min read

சென்னையில் பல்வேறு வார்டுகளில் உட்புற சாலைகளை மேம்படுத்த ரூ.121 கோடி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் ப.பெஞ்சமின், ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சென்னை மாநகர பகுதியில் பல்வேறு வார்டுகளில் உள்ள உட்புற சாலைகளை ரூ.121 கோடியில் மேம்படுத்துவது, சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிடங்கள், பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் விளம்பரம் செய்ய அனுமதி வழங்குவது, அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவது குறித்த அரசாணையை, மாநகராட்சி நிர்வாகத்தில் அமல்படுத்துவது உள்ளிட்ட 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மாமன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு சிந்தனையுடன் சென்னையில் 252 அம்மா உணவகங்களை திறந்தார். மேலும் முந்தைய ஆட்சியில் 103 ஆக இருந்த வயர்லெஸ் சாதனங்களை 1134 ஆக உயர்த்தியுள்ளார். வெள்ள பாதிப்பின்போது சுமார் 5 நாட்களுக்கு தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அப்போது வயர்லெஸ் கருவிகள்தான் கைகொடுத்தன.

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டோருக்கு அம்மா உணவகங் களில் இருந்து 1 கோடியே 28 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதனால் வயர்லெஸ் மற்றும் அம்மா உணவகங்களை தொலைநோக்கு சிந்தனையுடன் மாநகராட்சிக்கு வழங்கி, பேரிடரை எளிதாக எதிர்கொள்ளச் செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாமன்றம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

திமுக வெளியேற்றம்

மேயர் சைதை துரைசாமி, தங்களுக்கு மக்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை எனக்கூறி திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் மேயர் உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in