

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக வரும் சிறப்பு ரயில்களில் ரயில்வே காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கடந்த 14 நாட்களாக எந்தவித தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஓரளவுக்கு கரோனா தொற்று குறைந்தது. இதைத்தொடர்ந்து, ஜூன் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இதில், பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை மட்டும் காலை முதல் மாலை வரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங் கப்படவில்லை.
தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு மாதமாக டாஸமாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மதுப்பிரியர்கள் சாராயம், கள், வெளிமாநில மதுபானங்களை வாங்கி பயன் படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் சாராயம், கள் ஆகியவை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் வேலூர் மாவட்டத்தை யொட்டியிருப்பதால் வெளிமாநில மதுபானங்கள் வேலூர் மாவட் டத்துக்குள் எந்தவித தடையும் இல்லாமல் கொண்டு வரப்படுகிறது.
குறிப்பாக கர்நாடகாவில் இருந்து ஆந்திர மாநிலம் வரை செல்லும் விரைவு ரயில், அதி விரைவு ரயில்களில் மதுபான வகைகள் அதிக அளவில் கடத் தப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் ரயில்கள் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி வழியாக ஆந்திராவுக்கு செல்கிறது. எனவே, இந்த ரயில்களில் மதுபானம் கடத்தினால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு எளிதாக மதுபானங்களை கொண்டு செல்லலாம் என மதுகடத்தல் கும்பல் திட்டமிட்டு ரயில்களில் அதிக அளவில் மதுபானங்களை கடத்தத்தொடங்கியுள்ளனர்.
இதைக்கண்டறிந்து மதுபானம் கடத்துபவர்களை கைது செய்ய வேண்டும் என ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பேரில், காட்பாடி ரயில்வே காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப்படையினர் காட்பாடி வழியாக ஆந்திரா நோக்கிச்சென்ற அதி விரைவு ரயில்களில் நேற்று சோதனையிட்டனர். பயணிகளின் உடமைகள், பெட்டிகளை திறந்து சோதனையிட்டனர்.
இது குறித்து ரயில்வே காவல் துறையினர் கூறும்போது, ‘‘கடந்த 3 வாரங்களுக்கு மேலாக ரயில்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெங்களூருவில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை கடத்தி வந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்பேரில், கடந்த 15 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்துள்ளோம். தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெற்று வருவதால் ரயில்களில் கண்காணிப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில், கண்காணிப்பு தீவிர மாக்கப்பட்டுள்ளது. ரயில்களில் மதுபானங்களை கடத்தி வந்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.