Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

எரிவாயு தகனமேடையில் உடல்களை எரிக்க கட்டணம் நிர்ணயம்: ஆரணி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஆரணி நகராட்சி எரிவாயு தகனமேடையில் கட்டணம் வசூலிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.

ஆரணி

ஆரணியில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க எரிவாயு தகனமேடையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாருக்கு நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாலை மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் அதிகமாகவே உள்ளது. கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் பல்வேறு இடங்களில் உடல்களை எரித்து வருகின்றனர்.

ஆரணி நகராட்சி கட்டுப்பாட்டில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் பின்புறம் எரிவாயு தகனமேடை உள்ளது. தனியார் தொண்டு நிறுவன பராமரிப்பில் உள்ள இந்த தகனமேடையில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க 7 ஆயிரம் ரூபாய்வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கெனவே கரோனா தொற்றால் உறவினர்களை இழந்து தவிக்கும் நிலையில் வேறு வழியே இல்லாமல் அங்குள்ள பணியா ளர்கள் கேட்கும் தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த புகாருக்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அருண்குமார் கூறும்போது, ‘‘இந்த எரிவாயு தகனமேடையை தனியார் தொண்டு நிறுவன பராமரிப்புக்கு அளித்தபோது அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தில் 20 சதவீதத்தை மட்டும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இதுவே அதிக கட்டணம் வசூலிக்க காரணமாக உள்ளது. ஒவ்வொரு உடலை எரிக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட் டது, அதில் எவ்வளவு தொகை நகராட்சிக்கு செலுத்தப்பட்டது என்ற விவரங்கள் முறையாக இல்லை. அவர்கள் நகராட்சிக்கு செலுத்தும் தொகைதான் கணக்காக உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது கட்டணம் வசூலிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒரு உடலை எரிக்க அதிகபட்சமாக ரூ.1,200 வரைதான் செலவு ஆகும். ஆனால், அதற்கும் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையில், ஆரணி நகராட்சி அதிகாரிகள் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து விசாரணை நடத்தி, உடல்களை எரிக்க ரூ.2,000 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், அந்த கட்டண விவரத்தை அங்குள்ள சுவற்றில் பெயின்டால் எழுதி வைத்ததுடன் அதிக கட்டணம் குறித்த புகார்களை தெரிவிக்க நகராட்சி அலுவலக எண்ணையும் விளம்பரப்படுத்தியுள்ளனர்.

அதிக கட்டணம் வசூலிக்கும் புகாருக்கு நகராட்சி அதிகாரிகள் தரப்பில் இருந்து தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x