கடைசியாக ரூ.3,000 செலுத்தியோருக்கு ரூ. 8,000 மின் கட்டணம்: சிவகங்கை மின்வாரிய அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்

சிவகங்கை மின்வாரிய மின் கட்டணம் செலுத்தும் மையத்தில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்.  
சிவகங்கை மின்வாரிய மின் கட்டணம் செலுத்தும் மையத்தில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்.  
Updated on
1 min read

சிவகங்கை மின்வாரிய அலுவலகத்தில் கடைசியாக மின்கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தியோருக்கு ரூ.8 ஆயிரம் வந்துள்ளது. இதுபோன்ற குளறுபடிகளால் வாடிக்கையாளர்கள் மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பரவலால் மே மாதம் மின் கணக்கீடு எடுக்கவில்லை. இதனால் ஜூன் 15-ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.

மேலும் கடந்த 2019 மே மாதத்திற்குரிய மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த தொகை கூடுதலாக இருப்பதாக கருதினால், மின் மீட்டர் ரீடிங்கை தாங்களே கணக்கெடுத்தோ (அ) புகைப்படம் எடுத்தோ சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளருக்கு அனுப்ப வேண்டுமென மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஆனால் மின் மீட்டர் ரீடிங்கை அனுப்பியும் பல இடங்களில் இதுவரை உரிய கட்டணத்தை தெரிவிக்கவில்லை. மேலும் இதுகுறித்த தகவலும் பலருக்கு தெரியவில்லை.

இந்நிலையில் சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக மின் கட்டணம் செலுத்தும் மையத்தில் இன்று மின்கட்டணம் செலுத்த ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் மின் கட்டணம் செலுத்தியபோது, 2019-ம் ஆண்டிற்கான மின் கட்டணம் செலுத்துமாறு மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனால் மின் கட்டணம் செலுத்த வந்தோர் கடைசியாக செலுத்திய மின் கட்டண தொகையுடனே வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த தொகையை விட மின் கட்டணம் 3 மடங்காக இருந்ததால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் மின் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து காமராஜர்காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், ‘‘எங்களது வீட்டிற்கு கடைசியாக ரூ.3 ஆயிரம் செலுத்தினேன். ஆனால் தற்போது ரூ.8 ஆயிரம் செலுத்த சொல்கின்றனர்.

மின் மீட்டார் ரீடிங்கை எடுத்து வந்து காட்டியும் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் வேறுவழியின்றி ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டியதாயிற்று,’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in