கோவையில் கருப்புப் பூஞ்சை தொற்றால் 101 பேர் பாதிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோவையில் கருப்புப் பூஞ்சை தொற்றால் நேற்று வரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்றால் நுரையீரலில் அதிக பாதிப்பு ஏற்பட்டு, தீவிர கிசிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் படுக்கைகளில் நீண்ட நாட்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டாம் அலையில் அதிகமாக உள்ளது.

கரோனாவின் கூடுதல் வீரியம், அதற்கேற்ப சிகிச்சையின்போது அளிக்கப்படும் மருந்துகள் என இரண்டும் இணைந்து நோய் எதிர்ப்புத் திறனைக் குறைப்பதால் கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு தமிழகத்தில் பரவலாக உறுதியாகிவருகிறது.

தமிழகத்தில் நேற்றுவரை (ஜூன் 08) ஆயிரத்துக்கும் அதிகமானோர் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் நேற்றுவரை 101 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ​

இது தொடர்பாக, சுகாதாரத்துறையினர் கூறும்போது, "பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கருப்புப் பூஞ்சை எளிதில் தொற்றுகிறது.

எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தேவைப்படுவோருக்கு மட்டுமே ஸ்டீராய்டு மருந்துகளை அளிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள், நோய் எதிர்ப்புத் திறனில் மாறுதல் ஏற்படுத்தக்கூடிய மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும், யாருக்கேனும் கருப்புப் பூஞ்சை தொற்று இருப்பது உறுதியானால், உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in