

சென்னையில் மழை வெள்ளம் பாதிப்புகளிலிருந்து, இழப்புகளிலிருந்து மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகி வருகின்றனர் அல்லது தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆனால், சிறுவர், சிறுமியர் மனங்களில் இந்த மழை வெள்ளத்தின் தாக்கம் ஒரு பீதியைத் தக்கவைத்திருக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
பொதுவாகவே வாழ்க்கையில் ஏற்படும் மிகப்பெரிய துன்பங்கள், இழப்புகள், நேசமிக்கவர்களை இழக்கும் தருணங்கள் மேலோட்ட மனதுக்கு அடியில் நனவிலி மனதில் ஆழமாக வேரூன்றி அதன் தாக்கம் அதன் பிற்பாடு நிகழ்வுகளுடனும் பொருத்தப்பாடு கண்டு மீண்டும் மீண்டும் அத்தகைய துன்பத்தை மனத்தளவில் வாழ நனவிலி மனம் நம்மை செலுத்திக் கொண்டேயிருக்கும் என்பது உளவியல் நிபுணர்களின் அனுபவ உண்மை.
தமிழகத்தை, குறிப்பாக சென்னையை புரட்டிப் போட்ட இந்த மழை வெள்ளமும் குழந்தைகளிடத்தில் இத்தகைய தீரா பீதியை, துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று மனநல நிபுணர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து மனநல மருத்துவர் லஷ்மி விஜயகுமார் கூறும்போது, “இயல்பு நிலை திரும்பிய பிறகு 2 வாரங்களுக்கு அன்றாடத் தேவைகளில் மக்கள் கவனம் செலுத்தி வருவார்கள். அதன் பிறகே வெள்ளம் பற்றிய உளவியல் தாக்கத்தை உணரத் தொடங்குவார்கள்.
குழந்தைகளிடத்தில் வெள்ள பீதி பல்வேறு உடல்/மன சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம். அதாவது இரவு படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவது, பள்ளிகளுக்குச் செல்ல மறுப்பது, உணவு எடுத்துக் கொள்ள மறுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். சற்று வயதில் பெரியவர்களுக்கும் கூட முழுதுமான ஒரு விலகல் மனப்பான்மை, பயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது, ஆனால் பெற்றோர்களின் ஆதரவுடன் குழந்தைகளை இதிலிருந்து மீட்க் முடியும்” என்கிறார்.
மனச்சிதைவு ஆராய்ச்சி அறக்கட்டளை (SCARF) மழை வெள்ளத்தினால் மன அழுத்தம் ஏற்பட்டவர்களுக்கான உதவி எண்களை அறிவித்துள்ளது என்கிறார் அதன் இயக்குநர் ஆர்.தாரா.
“குழந்தைகளுக்கு பயங்கர கனவுகள் தோன்றி தூக்கம் கெடலாம். வெள்ள்நீர் பெருகி வருவது போன்ற காட்சிகள் மற்றும் அவர்கள் கண்ட பிற காட்சிகள் கனவில் தோன்றலாம். ஏற்கெனவே இந்த அடுத்த ஆண்டில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பாடங்கள் முழுக்க நடத்தி முடிக்கப் படாததால் அவர்களுக்கு மேலும் மனச்சுமை அதிகரிக்கலாம். இதில் பல மாணவர்கள் பள்ளிப் பாடபுத்தகங்களையும் பறிகொடுத்துள்ளனர்” என்றார்.
குழந்தைகள் மனநல மருத்துவர் சிவப்பிரகாஷ் ஸ்ரீநிவாசன், இதற்காக குழந்தைகளுக்கு மன நல ஆலோசனைகள் தேவைப்படாது என்கிறார். அதாவது எது நடந்ததோ அதன் தீவிரத்தை குழந்தைகள் எப்படி உணர்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே போதும் என்கிறார் அவர்.
முதியோர்களில் சிலர் தங்களது தூக்கத்தை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கும் மருத்துவர் லஷ்மி விஜயகுமார், அவர்களில் பலருக்கு தங்களால் முடியாமல் போனது குறித்த குற்ற உணர்வு ஏற்படும் என்றும் இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.
இது தொடர்பாக SCARF-ஐ அணுக விரும்புபவர்கள் 9445040236 அல்லது 9789007934 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.