Published : 06 Dec 2015 02:28 PM
Last Updated : 06 Dec 2015 02:28 PM

ஒவ்வொரு பொருளிலும் மறைந்திருக்கும் மறைநீர் அளவை குறைக்க சிக்கனம் அவசியம்: வேளாண்மை அறிவியல் நிலையம் தகவல்

தாவரங்கள், விலங்கினங்கள், நுண்ணுயிர்கள் போன்ற உயிரினங் களுக்கும், மனிதர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் தண் ணீரே அடிப்படை ஆதாரமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டாக பருவம் தவறிய மழை வெள்ளம், வறட்சி, சமமற்ற சுற்றுச்சூழல் போன்ற காரணங் களால் நீர்வள ஆதாரங்களை நம்பியிருக்க முடியாத சூழல் உள் ளது.

தற்போது வடகிழக்குப் பருவ மழை 8 மாவட்டங்களில் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தினாலும், கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தொடர்கதையாகிறது. மழைப்பொழிவு குறைவு, பொது மக்களின் சிக்கனமில்லா தண்ணீர் பயன்பாடு, பழைய விவசாய பாசன முறை போன்றவை இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது. எனினும், மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள் தயாரிப்பிலும் மறைந்திருக்கும் ‘மறைநீர் பயன் பாட்டின்’ அதிகரிப்பும் முக்கியக் காரணமாகிறது.

இதுகுறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் இரா.வீரபுத்திரன் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் நீரே மறைநீர் எனப் படுகிறது. ஒவ்வொரு பொருளுக் குள் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நீர்தான் மறைநீர்.

ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் ஒரு செ.மீ. உயரத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு 1 லட்சம் லிட்டர் தேவை. எனவே, ஒருமுறை வயலில் 5 செ.மீ. உயரத்தில் நீர்ப்பாசனம் செய்தால் தேவைப்படும் நீரின் அளவு 5 லட்சம் லிட்டர்.

பயிர் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை தேவைப் படும் தண்ணீரையே ‘நீர்த்தேவை’ என்கிறோம். எடுத்துக்காட்டாக நெல் சாகுபடிக்கு 125 செ.மீ., முதல் 150 செ.மீ. உயரத்துக்கு தண் ணீர் பாய்ச்ச 125 லட்சம் முதல் 150 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. இவ்வாறு விவசாயத்தில் தானியங்கள் உள்ளிட்ட விளை பொருட்கள் உற்பத்தி செய்யத் தேவைப்படும் தண்ணீர் கணக்கிடப் படுகிறது.

குறிப்பாக, 400 கிராம் (0.4 கிலோ) நெல் உற்பத்தி செய்ய ஒரு கனமீட்டர் (1000 லிட்டர்) தண்ணீர் தேவை. இதுவே மறைநீர் என அழைக்கப்படுகிறது.

ஒரு விலங்குக்கு ஒரு நாளைக் குத் தேவைப்படும் நீரின் அளவு, அது உட்கொள்ளும் புல்/வைக் கோல் உற்பத்திக்கு தேவைப்படும் நீரின் அளவையும் இவ்வாறு கணக்கிடலாம். இது மட்டுமின்றி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் குண்டூசி, பேனா, அலைபேசி, கணினி வரைக்கும் ஒவ்வொரு பொருளிலும் மறைநீர் பயன்பாடு மறைந்திருக்கிறது.

ஒரு கிலோ தக்காளி உற்பத்தி செய்ய 200 லிட்டர், ஆரஞ்சு பழத்துக்கு 560 லிட்டர், ஆட்டு இறைச்சிக்கு 2,300 லிட்டர், கோழி இறைச்சிக்கு 4,300 லிட்டர், பன்றி இறைச்சிக்கு 6,000 லிட்டர், மாட்டு இறைச்சிக்கு 16,000 லிட்டர், வெண்ணெய்க்கு 5,300 லிட்டர், ஒரு ஜோடி தோல் செருப்புக்கு 17,000 லிட்டர், ஒரு ஜீன்ஸ் பேன்ட்டுக்கு 10,000 லிட்டர்,

ஒரு இலகுரக கார் (1.1 டன் எடை) தயாரிக்க 4,00,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால், சொட்டுநீர் பாசனம், சிக்கன நீர் பாசனத்தை பின்பற்றி விவசாயிகள் பாசனம் செய்ய வேண்டும். பொருட்கள் உற்பத்தி யில் மறைநீர் அளவை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளின் தந்திரம்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பணத்தைக் கொண்டு மதிப்பிடுவது போல தண்ணீரைக் கொண்டு மதிப்பிடுவதுதான் தண்ணீர் பொருளாதாரம். இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஆண்டனி ஆலன் என்பவர். சந்தையில் ஒரு கிலோ நெல் விதை விலை ரூ.20 ஆகும். ஆனால், இதை உற்பத்தி செய்ய தேவையான தண்ணீரோ 2,500 லிட்டர்.

இந்த தண்ணீரை கணக்கீட்டுப் பார்த்தால் ஏற்படும் நஷ்டம் கணக்கிலடங்காது. அதனால் ஐரோப்பிய, வளைகுடா நாடுகள் அதிகளவு தண்ணீர் தேவைப்படும் முட்டை, ஆரஞ்சு பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை புத்திசாலித்தனமாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து பெருமளவு தண்ணீர் தேவையைக் குறைத்து விடுகின்றன என்கிறார் வீரபுத்திரன்.

படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x