Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

சிறு குறு தொழில் பிரிவினரின் கடனுக்கு அவகாசம் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்- 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை

குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனத்தினர், சிறு கடனாளர்கள் 2 காலாண்டுக்கு கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து மத்திய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுரை வலியறுத்த கோரி, 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக ஆந்திரா, பிஹார், சத்தீஸ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 12 மநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான மிகச் சரியானஒற்றைப் பேரமைப்பாக மத்திய அரசே செயல்பட வேண்டும் என்ற கருத்தை மாநில முதல்வர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய அரசே முழு அளவில்தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க நாம் வலியுறுத்திருந்தோம்.

இந்நிலையில், நம் அனைவரின்கூட்டு முயற்சியால், பிரதமர் தனது முந்தைய கொள்கையை நேற்று (ஜூன் 7-ம் தேதி) மாற்றி அமைத்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் குறு சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் 2-வது அலைகளின்போது வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

நிவாரணம் அளிக்கவில்லை

இந்த ஆண்டு ஏப்ரல், ஜூன்மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்,கரோனா பெருந்தொற்றின் முதல்அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம்தற்போது அளிக்கப்படவில்லை. இதனால் கடன்களைத் திருப்பிச்செலுத்துவதை தள்ளிவைத்து, கூடுதல் கால அவகாசம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையைமத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.

எனவே, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி வரையில் நிலுவைகளை கொண்டுள்ள அனைத்து சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு இந்த 2021-22ம் ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு, கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய நிதியமைச்சர், இந்திய ரிசர்வ்வங்கியின் ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்துக்கும் கொண்டுசெல்ல வேண்டும். இந்த காலகட்டத்தில் நமது கூட்டு வலிமையைநாம் வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x