

தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பு ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாநிலகூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு கடன் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிதலைமை வகித்து பேசியதாவது: ரேஷன் கடைகள் மூலம்கரோனா நிவாரண நிதி முதல் தவணை எவ்வித புகாரும் இன்றி வழங்கப்பட்டுவிட்டது. 2-வதுதவணை ஜூன் 15-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. அதேபோல, 14 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட உள்ளன.
ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி விநியோகம் செய்வதாக புகார்கள் வந்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த அரிசியை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். கடந்த காலங்களில் உறுப்பினர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்கியதில் முறைகேடுநிகழ்ந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக பாரபட்சம்இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
2015-16-ம் ஆண்டு கடன்கள்..
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் நடப்பு ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்து, அவர்களுக்கு தகுதியின்அடிப்படையில் புதிய கடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு வரவேண்டிய பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 2015-16-ம்ஆண்டில் வழங்கப்பட்ட கடன் தள்ளிவைக்கப்பட்டு, 3 தவணைகளில் கட்ட முன்பு அறிவுறுத்தப்பட்டுஇருந்தது. இந்த கடன் தொகையைதள்ளுபடி செய்ய வேண்டும்என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
கூட்டுறவு சங்க நிர்வாகம் கலைப்பு?
அமைச்சர் ஐ.பெரியசாமி மேலும் கூறும்போது, ‘‘அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் கடன் தள்ளுபடி விவரம், நகைக் கடன்கள், பொறுப்புகள், சொத்துகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்.
கடந்த ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மீது அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்களை முறையாக ஆய்வு செய்துவிசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைத்துவிட்டு, புதிதாகதேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கும்” என்றார்.
இக்கூட்டத்தில் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்பி, எம்எல்ஏக்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.