Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

எம்.ஜி.ஆர். படங்களுக்கு திரைக்கதை எழுதியவர்: திரைப்பட இயக்குநர் சொர்ணம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை

திரைப்பட இயக்குநர் சொர்ணம் (88) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். சென்னை கொட்டிவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

இயக்குநர் சொர்ணம் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதியின் முதல் பிள்ளையான `முரசொலி' நாளிதழ் உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். மாணவப் பருவத்திலேயே கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் அடங்கிய 'விடைகொடு தாயே' என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் திமுகவின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர்.

எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களுக்கு திரைக்கதை எழுதிய அவர், கருணாநிதி எழுதிய `ஒரே ரத்தம்' எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரித் தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி, கலை இலக்கியப் பணிக்கு பெருமை சேர்த்தவர்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x