Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு சிறப்பு மையம்: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திறப்பு

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கருப்பு பூஞ்சை நோய் வேகமாகப் பரவி வருகிறது. தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகமான ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினை இருப்பவர்கள் போன்றவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதுவரை சென்னையில் 277 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 950-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 150 ஆக்சிஜன் படுக்கைகள், 40 தீவிர சிகிச்சைப் படுக்கைகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார்.

மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரின் உடல்நிலையை உறவினர்கள் அறிந்து கொள்வதற்கான டிஜிட்டல் தகவல் பலகையை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

8 பேட்டரி கார்கள்

தொடர்ந்து, நோயாளிகளுக்கான 8 பேட்டரி கார்களின் சேவையை தொடங்கிவைத்த உதயநிதி ஸ்டாலின், காமராஜர் துறைமுகம் தலைவர் சுனில் பாலிவால் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டிகளை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்எல்ஏ மூர்த்தி, மருத்துவமனை டீன் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x