Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

புதுச்சேரியில் அனைத்து மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் கையிருப்பு இல்லை: ஜிப்மர் நிர்வாகமும் கைவிரிப்பு நோயாளிகள் தவிப்பு

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காக்கும் ‘லைபோசோமல் அம்போடெரிசின் பி’ என்ற மருந்து புதுச்சேரியில் ஜிப்மர் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் தீர்ந்து விட்டது. வெளியில் இருந்து வாங்கி வர ஜிப்மர் நிர்வாகம் தெரிவிப்பதால் நோயாளிகளின் உறவினர்கள் தவிக்கின்றனர். இப்பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் தேவையான மருந்துகளை மத்திய அரசிடம் இருந்து பெற அரசு கவனம் செலுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2ம் அலை பரவி வரும் நிலையில் ஒரு புதிய சவாலாக ‘மியூகோர் மைகோசிஸ்’ (Mucor Mycosis) எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் உருவெடுத்துள்ளது.

இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டுள்ள நபர்களுக்கும், எதிர்ப்புசக்தி குறைபாடு உள்ளவர்களுக் கும் பாதிப்பை ஏற்படுத்தும். கரோனா தொற்றுக்கு ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் செயற்கை சுவாசம்மூலம் சிகிச்சை பெற்றவர்கள், நீண்ட காலம் ஆக்சிஜன் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள், மற்ற நோய்களுக்காக எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை உட்கொள்வோர் இந்த நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடக்க நிலையிலேயே ஒரு நோயாளிக்கு கருப்பு பூஞ்சை கண்டறியப்பட்டால் குறைந்தபட்சம் 15 முதல் 20 நாட்கள் வரை அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். அதுவே நோய் தாக்கம் தீவிரமாக இருந்தால் ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நிலை ஏற்படும்.

புதுச்சேரியில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவத்தொடங்கியுள்ளது. புதுச்சேரிஅருகேயுள்ள தமிழக மாவட்டங்களைச் சேர்ந்தோரும் புதுச்சேரி யிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

தற்போதைய நிலை தொடர்பாக மருத்துவனை வட்டாரங்க ளிலும், நோயாளிகளின் உறவி னர்களிடமும் விசாரித்தபோது, "தமிழக நோயாளிகள் உட்பட மொத்தம் 66 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுடன் புதுச்சேரியில் சிகிச்சை பெற்றனர். இதில் புதுவையைச் சேர்ந்த இருவர், தமிழக பகுதியைச் சேர்ந்த மூவர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் பார்வை இழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக ஜிப்மர் மருத்துவமனையில் 22 புதுவை நோயாளிகள் உட்பட 47 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய அரசு புதுவைக்கு இதுவரை 340 ‘லைபோசோமல் அம்போடெரிசின் பி’ மருந்து குப்பிகள் வழங்கி யுள்ளன. இவை அனைத்தும் தீர்ந்து விட்டன. தற்சமயம், புதுவை அரசு மருத்துவமனைகளில் ‘பொசோகோனசோல்’ (Posoconazole 350mg) மாத்திரை மட்டும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மாத்திரை கூட ஜிப்மரில் கையிருப்பு இல்லை. அம்போடெரிசின் மருந்தை வெளியிலிருந்து வாங்கி கொடுக்குமாறு நோயாளிகளின் உறவினர்களிடம் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவை இன்னும் தனியார் மருந்தகங்களில் விற்பனைக்கு வரவில்லை. இதுபோன்றசூழலில் மருந்து கிடைக்காமல் நோயாளிகளும், அவர்களது உறவி னர்களும் தவித்து வருகின்றனர்." என்று குறிப்பிட்டனர்.

புதுச்சேரி சுகாதாரத்துறை உயரதிகாரிகள் தரப்பில் விசாரித் தபோது, "கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘லைபோசோமல் அம்போடெரிசின் பி’ என்ற மருந்தும், ‘பொசோகோனசோல்’ என்ற மாத்திரையும் மிகவும் அவசியம். ஒரு நோயாளியின் நிலைக்கு ஏற்ப 40 முதல் 50 மருந்து குப்பிகள் தேவைப்படும். ஒரு குப்பி மருந்து ரூ.5,816க்கு வாங்கப்படுகிறது. இதுவே ஜிஎஸ்டி சேர்த்தால் ஒரு குப்பி ரூ.7,300க்கு மேல் வரும். புதுவையில் நோயாளிகளுக்கு இலவசமாக தான் சிகிச்சை அளிக்கிறோம். தற்போது லைபோசோமல் அம்போடெரிசின் பி மருந்து கையிருப்பு இல்லை. மத்திய அரசிடம் பேசி மருந்துகளை வாங்கி கொடுப்பது அவசியம். " என்று குறிப்பிட்டனர்.

அதிகரிக்கும் பாதிப்பில் தேவையான மருந்துகளை மத்திய அரசிடம் இருந்து பெற ஆளுநரும், முதல்வரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் தேவையான மருந்துகளை மத்திய அரசிடம் இருந்து பெற அரசு கவனம் செலுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x