

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தில் சலுகை கேட்டு அரசுக்கு காமராஜர் நகர் எம்எல்ஏ ஜான்குமார் வாயிலாக முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதுச் சேரி துணைநிலை ஆளுநர் தமி ழிசை சவுந்தரராஜனுக்கு காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் கோரிக்கை விடும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளி வந்தது.
அதில், தனது தொகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மது போதைக்கு அடிமையாகி மது கிடைக்காததால் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினியில் தண்ணீர் கலந்து குடித்ததால் மரணமடைந்து விட்டார் என்றும், மது கிடைக்காமல் புதுச்சேரியில் பலர் சிரமப்படுவதாகவும் உடனடியாக மதுக்கடையை திறக்கவேண்டும் என்பதை கோரிக்கைவிடுத்திருந்தார். அதனை உடனடியாக ஏற்று ஆளுநரும் மதுக்கடைகளை திறக்க சம்மதித்துள் ளதாகவும் கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதைத் தொடர்ந்து நேற்று மதுக்கடைகளும் திறக்கப்பட்டு விட்டது. ஜான்குமாரின் கோரிக் கையை உடனடியாக அரசு நிறை வேற்றி உள்ளது.
இதே வேகத்தில் ஜான்குமா ருக்கு நான் கோரிக்கை வைக் கின்றேன். அவரின் செல்வாக்கை பயன்படுத்தி துணைநிலை ஆளுநரிடம் பேசி எனது கோரிக் கையையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடந்தாண்டு மார்ச் தொடங்கி இது நாள் வரை கரோனாவின் பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. ஆண்டின் பெரும்பாலான நாட்கள் பொது முடக்கத்திலேயே கழிந்து போகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமுடக்கத்தால் வருமானம் இழந்து பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். பெரும்பாலும் பள்ளிகள் செயல்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்ற சூழலில், முழு கட்டணத்தை செலுத்த சொல்லி தனியார் பள்ளிகள் பெற்றோருக்கு கடுமையான நெருக்கடியை தருகின்றன.
எனவே அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஆண்டு கட்டணத் தொகையில் கணிசமான தொகையை சலுகையாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். ஜான்குமார் விரைவில் அமைச்சர் பதவி ஏற்க உள்ளார் என்ற தகவலும் வருகிறது. இவர் மதுக்கடை தொடர்பாக வைத்த கோரிக்கையை ஆளுநர் உடனடியாக நிறைவேற்றி தந்த தைப் போல், எனது இந்த பள்ளிக் கட்டண
சலுகையையும் ஜான்குமார் தனது செல்வாக்காலும், இரண்டு எம்எல்ஏக்களை வைத்துள்ள குடும்பம் (ஜான்குமார் மகனும் எம்எல்ஏ) என்ற முறையிலும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து எனது கோரிக்கையை நிறைவேற்றினால் பல குடும்பங்கள் அவருக்கு நன்றி சொல்லும்’’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.