Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

பொதுமக்கள், சுய உதவிக்குழுவினரிடம் கடன் தவணையை கேட்டு நெருக்கடி தரக்கூடாது: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

கரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர், பொதுமக்கள், சுயஉதவிக்குழுக்களிடம் கடன் தவணையை செலுத்துமாறு வற்புறுத்தி நெருக்கடி தரக்கூடாது என தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிவுறுத்தினார்.

கரோனா அதிகமாகப் பரவியதால் கடந்த 24.05.2021 முதல் முழுஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மக்களிடம், கடன்மற்றும் வட்டித் தொகையை உடனடியாக செலுத்தக் கோரி சில நிறுவனங்கள் மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனை தொடர்ந்து அனைத்துமண்டல வங்கியாளர், நுண்நிதிநிறுவனங்கள் மற்றும் தனியார்நிதி நிறுவனங்களின் மேலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்கள், தொழில் செய்வோர் மற்றும் சுயஉதவிக் குழுவினரை வற்புறுத்தி கடன் தொகையை வசூல் செய்யவில்லை என வங்கி யாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் தவணைத் தொகை செலுத்த முடியாதவர்களை வற்புறுத்தி தவணைத் தொகை செலுத்திட வேண்டும் என நெருக்கடி தரவில்லை என நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் மேலாளர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, ‘‘மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடனுக்கான தவணைத் தொகையை திரும்பச் செலுத்த அறிவுறுத்தும் கடினப் போக்கை வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனத்தினர் தவிர்த்திட வேண்டும். எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும் என அறிவுரை கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடன் தொகை வசூலை கண்டித்து பெண்கள் நூதனப் போராட்டம்

தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடனுக்கு மாதந்தோறும் தவணைத் தொகையை செலுத்தி வந்தனர். ஆனால், தற்போது கரோனா ஊரடங்கால் தீப்பெட்டி ஆலையில் பணிபுரியும் பெண்கள், கூலி வேலை செய்பவர்கள், சாலையோர கடை நடத்தி வருபவர்கள் என பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தவணைத் தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும் என பெண்களிடம் வற்புறுத்தி வருகின்றனர். கட்டத் தவறினால், வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அரசு இந்தப் பிரச்சினையில் உடனே தலையிட்டு, தவணைத் தொகைகட்டுவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் பெண்கள் தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மந்தித்தோப்பு மற்றும் சுற்றுவட்டார கிரா மத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x