Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

தேர்தல் பணி வாகனங்களுக்கு வாடகை நிலுவை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் கவலை

தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட வாடகை வாகனங்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திருநெல்வேலி வாடகை வாகன உரிமையாளர் ஓட்டுநர்கள் நல முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்க தலைவர் சி.சந்தோசம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வாடகை வாகனங்கள் வைத்திருப்போர் நிலை பரிதாபமாக உள்ளது. வாகனத்துக்கு செலுத்த வேண்டிய சாலை வரி, இன்சூரன்ஸ் மற்றும் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. இந்த தொகையை செலுத்துவதில் இருந்து எந்த விதிவிலக்கும் அரசிடமிருந்து அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், வாடகை வாகனங்களை ஓட்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், சிலர் சொந்தமாக வைத்துள்ள நான்கு சக்கர வாகனங்களை இ.பாஸ் பெற்றுக்கொண்டு வாடகைக்கு ஓட்டுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாடகைக்கு பயன்படுத்தும் ஆட்டோ, கார்கள், வேன்கள், கனரக வாகனங்களுக்கு இஎம்ஐ கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கவும், இன்சூரன்ஸ் ஓராண்டுக்கு நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட வாடகை வாகனங்களுக்கு உரிய வாடகை தொகையை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர்கள் மனு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஸ்வகர்ம புரோகிதர்கள், அர்ச்சகர்கள் அளித்த மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் விஸ்வகர்ம புரோகிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள புரோகிதர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமமுக

தமிழக மக்கள் முன்னேற்ற கழக திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் அளித்த மனு விவரம்:

சிவந்திப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா தெரு, முத்துராமலிங்கம் தெரு ஆகிய இரு தெருக்களுக்கும் இடையே கழிவுநீர் வழிந்தோடி அங்குள்ள நடுநிலைப்பள்ளி அருகே குளம்போல் தேங்கியிருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து புகார் தெரிவித்ததை அடுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு சென்றார். ஆனாலும் இதுவரை கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் சொந்தமாக வைத்துள்ள நான்கு சக்கர வாகனங்களை இ.பாஸ் பெற்றுக்கொண்டு வாடகைக்கு ஓட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x