

ஓசூர் வனச்சரக காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்த 2 பேரை வனத்துறையின் சிறப்புக் குழுவினர் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.
ஓசூர் வனச்சரகத்தில் கும்பளம் காப்புக் காட்டுக்குள் நாட்டுத் துப்பாக்கியுடன் 2 பேர் நுழைந்துள்ளதாக மாவட்ட வன அலுவலர் பிரபுவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி மேற்பார்வையில் காருபெல்லா பிரிவு வனவர் கதிரவன் தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு காருபெல்லா, கும்பளம் காப்புக்காட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியுடன் 2 பேர் சுற்றிக் கொண்டிருந்தனர். அந்த 2 பேரையும் சிறப்புக் குழுவினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் பெரியகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனியப்பா மகன் வெங்கடேசப்பா (24) என்பதும், மற்றொருவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பைரப்பா மகன் ரவி (23) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடன் காட்டுக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறும்போது, ''சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் கள்ள நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கி எங்கு தயாரிக்கப்பட்டது, எந்த வழியாக எடுத்து வரப்பட்டது, இதுபோன்ற நாட்டுத் துப்பாக்கிகள் வேறு ஏதேனும் இருக்கின்றனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதில் முக்கிய பிரமுகர்கள் எவரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சானமாவு, சூளகிரி மற்றும் பேரிகை போன்ற வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராமப் பகுதிகளிலும் சிறப்புக் குழு அமைத்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் சிறப்புக் குழு அமைத்து 38 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது'' என்று பிரபு தெரிவித்தார்.