

கோவையில் கரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலித்ததாக புகாருக்குள்ளான மேலும் 2 தனியார் மருத்துவமனைகள் குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக் குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டி, துடியலூர், சுந்தராபுரம், சுங்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 4 தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கரோனா நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்தாக புகார்கள் எழுந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில், 4 தனியார் மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்த வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டார்.
பின்னர், சரவணம்பட்டியில் உள்ள மருத்துவமனையில் விசாரணைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. கேட்கப்பட்ட வரவு, செலவு கணக்குகள், ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்து, விசாரணை முடிவடையும்வரை, புதிதாக எந்த கரோனா நோயாளியையும் அந்த மருத்துவமனை அனுமதிக்கக் கூடாது என, சுகாதாரத்துறை இணை இயக்குநர் தற்காலிகத் தடை விதித்து கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டார்.
இதேபோல, புகாருக்குள்ளான கோவை துடியலூரில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டு, அந்த மருத்துவமனையிலும் புதிதாக கரோனா நோயாளிகளை அனுமதிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழுவினர், புகாருக்குள்ளான சுந்தராபுரம், சுங்கம் பகுதியில் செயல்படும் 2 தனியார் மருத்துவமனைகள் குறித்து விசாரணை செய்து ஆட்சியரிடம் அறிக்கை அளித்துள்ளனர். விரைவில் அந்த அறிக்கைகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.