Published : 08 Jun 2021 06:08 PM
Last Updated : 08 Jun 2021 06:08 PM

கரோனா தொற்றால் பலி; சரியான காரணத்தைக் குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் அளிக்க வேண்டும்: ஈபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

கரோனா நோய்த்தொற்றால் இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தைக் குறிப்பிட்டுச் சான்றளிக்க வேண்டும் என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஈபிஎஸ் இன்று (ஜூன் 08) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா நோய்தொற்றின் காரணமாக தமிழகத்தில் நேற்று (ஜூன் 07) வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆகும். கடந்த ஒருசில வாரங்களாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, கரோனா நோய்த்தொற்றால் இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்புச் சான்றிதழில் கரோனா நோய்த்தொற்றால் இறந்தார்கள் என்று குறிப்பிடுவதில்லை.

மாறாக, கரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்புச் சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கரோனா நோய்த்தொற்றினால் இறப்பவர்கள், கரோனா வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், கரோனா நோய்த்தொற்றினால் இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்புச் சான்றிதழ் தருவதால், ஒருசிலர் இறந்தவர்களது உடல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று உற்றார் உறவினர் கலந்துகொள்ளும் வகையில் இறுதிச் சடங்கை மேற்கொள்கின்றனர்.

இதனால், கரோனா நோய்த்தொற்று முழு அளவில் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும், இறப்புச் சான்றிதழில் வேறு காரணங்களைக் குறிப்பிடுவதால், கரோனா நோய்த்தொற்றால் பெற்றோர்களை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.

நேற்று உச்ச நீதிமன்றத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி குறித்த வழக்கு விசாரணையின்போது, 'அனைத்து மாநில அரசுகளும், மாவட்ட அதிகாரிகள் வாயிலாக குழந்தைகளைக் கணக்கெடுத்து, 24 மணி நேரத்திற்குள் சிறார் நலக் குழுக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே, தமிழ்நாடு அரசு கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது இறப்புச் சான்றிதழில் கரோனா நோய்த்தொற்றினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தைக் குறிப்பிட்டு சான்றளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கரோனா நோயினால் பெற்றோரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு, அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் சரியான முறையில் சென்றடைவதையும், கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x