

கரோனா பெருந்தொற்று காலத்தில் கடும் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் போலீஸாரை மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருச்சி தெப்பக்குளத்தான்கரையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில் சென்றனர். ரோந்து போலீஸார் அவர்களை நிறுத்தி முகக்கவசம் அணியாமல் போனது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் போலீஸாரை ஆபாசமாக பேசி, தாக்கவும் முயன்றுள்ளனர்.
இந்த வழக்கில் போலீஸார் தேடி வரும் காஜா என்பவர், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
கூடுதல் அரசு வழக்கறிஞர் எஸ்.ரவி வாதிடுகையில், போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலைமறைவாக உள்ளனர் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பெருந்தொற்று காலத்தில் ஏற்கெனவே போலீஸார் கடுமையான மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா கிருமி அப்பாவி மனிதர்களின் விலைமதிக்க முடியாத உயிர்களை பறித்து வரும் சூழலை ஒவ்வொரும் உணர வேண்டும்.
முழு ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் அங்கும் இங்கும் அலைபவர்களை நிறுத்தி போலீஸார் கேள்வி கேட்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்கள் போலீஸாருக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்.
அதைவிடுத்து போலீஸாரை ஆபாசமாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இது போன்ற செயல்களை கடுமையாக அணுக வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரியும் போலீஸாரை மிரட்டுபவர்கள் மீது நீதிமன்றம் கருணை காட்ட முடியாது.
மனுதாரர் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்தும் பதிவாளரிடம் கடிதம் வழங்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் வழக்கறிஞர்கள் எழுத்தர்கள் சங்கத்துக்கு மனுதாரர் ஜூன் 11-க்குள் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஜூன் 14-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மனுதாரரை போலீஸார் கைது செய்யக்கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.