

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இம்மருத்துவமனையில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட 650 படுக்கைகள் காலியாகிவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. திருநெல்வேலி மாநகரிலும் தொற்று பரவல் குறைந்து வருவது சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மாநகரில் நேற்று 1120 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலையில் வெளியானது. பரிசோனை மேற்கொண்டவர்களில் 14 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8 பேர் பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர்கள். டார்லிங் நகரில் ஒரே முகவரியில் 4 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொக்கிரகுளம் சோதனை சாவடியில் நடத்தப்பட்ட ஆய்வில் தளவாய்புரம் மற்றும் தாழையூத்தை சேர்ந்த தலா ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் வெளியே நடமாடுவதும், வாகனங்களில் செல்வதுமாக உள்ளனர். இதனால் மீண்டும் பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பது குறித்து சுகாதாரத்துறையினர் கவலை தெரிவிக்கிறார்கள்.
கரோனா தொற்று குறைந்துவருவதால் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான படுக்கைகள் காலியாகியுள்ளன. அதேநேரத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக தனிவார்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டவை.
தற்போது கரோனா பாதிப்பு பாதிக்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் மருத்துவமனையிலுள்ள 650 படுக்கைகள் காலியாகவுள்ளன. தற்போது 540 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பட்ட 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு தேவையான மருந்துகள் இங்கு உள்ளன என்று தெரிவித்தார்.
தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுஇடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பது, சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிப்பது போன்றவற்றால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் அபாயம் இருக்கிறதா என்பது குறித்து கேட்டபோது, பொதுஇடங்களுக்கு செல்வோர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. தடுப்பூசி போடும் மையங்கள் பலவும் மூடப்பட்டிருந்ததால் அங்குவந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினரை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஜே. முகமது அலி, செயலாளர் எஸ். இம்ரான் அலி உள்ளிட்டோர் சந்தித்தனர். பெருந்தொற்று காலத்தில் தங்களது பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் உடனிருந்து செயலாற்றுவதாகவும் குறிப்பிட்டனர்.
கிருமி நாசினி தெளிப்பு:
திருநெல்வேலி மருத்துவமனையில் பணியில் இருப்பவர்கள், புறநோயாளிகள், அவசர சிகிச்சைக்கு வருபர்வகளுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க தினமும் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் உத்தரவிட்டுள்ளதை அடுத்து சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் அரசு மருத்துவ மனையில் நவீன பெல் மிஸ்டர் கருவி மற்றும் நவீன டிராக்டர் மூலமாக கிருமி நாசினி தொடர்ந்துதெளிக்கப்பட்டது.