Last Updated : 08 Jun, 2021 02:41 PM

 

Published : 08 Jun 2021 02:41 PM
Last Updated : 08 Jun 2021 02:41 PM

காரைக்காலில் அரசு சார்பில் இலவச கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் திட்டம்: தமிழகப் பகுதியினரும் பயன்படுத்திக் கொள்ளலாம்

காரைக்காலில் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இலவச கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் திட்டத்தை கரோனா நோய்த் தொற்றாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால், அரசு ஆயுஷ் மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.தியாகராஜன் இன்று (ஜூன் 8) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“புதுச்சேரியில் இயங்கிவரும் மத்திய அரசு நிறுவனமான மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை ஆகியவை இணைந்து குறிகுணங்களற்ற, குறைவான அல்லது மிதமான குறிகுணங்கள் உடைய கோவிட் தொற்று நோயாளிகளுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் திட்டத்தினை காரைக்கால் பகுதியில் செயல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின்படி காரைக்கால் பகுதியிலோ அல்லது காரைக்கால் மாவட்டத்தையொட்டியுள்ள தமிழகப் பகுதிகளிலோ உள்ள 18லிருந்து 60 வயதுக்குட்பட்ட கரோனா தொற்றாளர்கள் தங்களுக்கு தேவையான கபசுரக் குடிநீர் சூரணத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இதனைப் பெற, கரோனா பரிசோதனை செய்த தேதி, குறிகுணங்கள் தொடங்கிய தேதி, ஆதார் எண் மற்றும் இரண்டு செல்போன் எண்கள் ஆகியவற்றை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆயுஷ் மருத்துவ அலுவலரிடம் சமர்ப்பித்து 20 நாட்களுக்குரிய கபசுரக் குடிநீர் சூரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

கரோனா தொற்றாளர்கள் உள்ள வீட்டில், குறிகுணங்கள் உடைய மற்றவர்களும், குறிகுணங்கள் தொடங்கிய தேதி, ஆதார் எண், செல்போன் எண்கள் ஆகிவற்றைச் சமர்ப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கபசுரக் குடிநீர் சூரணம் தேவை என்று கருதுவோரும் பெற்றுக்கொள்ளலாம்.

சூரணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு மருத்துவமனையிலிருந்து 1, 7, 14, 20 ஆகிய நாட்களில் தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பை ஏற்று, தங்கள் உடல்நலம் குறித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இது தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய 94879 90382 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்”.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x