Published : 08 Jun 2021 02:08 PM
Last Updated : 08 Jun 2021 02:08 PM

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை

கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 2020 ஜன. 1ஆம் தேதி முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமதக் கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் குறைக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை அறிவோம். நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறித் தவிர்க்க முடியாத நேர்வுகளில் இறப்புகள் நிகழ்ந்துவிடுகின்றன.

துயரமான இந்தச் சம்பவத்தில், சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம், 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ன்படி, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்திற்குப் பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ.100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ.200/- ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500 ஆகவும் உள்ளது.

பெருந்தொற்றினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், இக்கட்டணத்திலிருந்து பொதுமக்களுக்கு விலக்களிக்கவும், அந்தக் காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 1-1-2020 முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமதக் கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

காலதாமதக் கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தமிழ்நாடு அரசே ஈடுசெய்யும். இருப்பினும், உரிய காலத்தில் பிறப்பு / இறப்பினைப் பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x