

நெல்லை நீதித்துறை நடுவர் மன் றத்தில் நிலுவையில் உள்ள வேளாண் பொறியாளர் முத்துக் குமாரசாமி தற்கொலை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையின்போது நேரில் ஆஜராக அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது.
நெல்லையைச் சேர்ந்த வேளாண் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, கடந்த பிப். 20-ம் தேதி தென்காசியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டத் தில் வேளாண் துறையில் தற் காலிக ஓட்டுநர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களிடம் தலா ரூ.1.75 லட்சம் பணம் வசூல் செய்து தரும்படி வற்புறுத்தியதால் முத்துக் குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக அவர் மனைவி சரஸ் வதி போலீஸில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக அப்போதைய வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் மற்றும் பூவையா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவு 7, கூட்டுச்சதி, தற் கொலைக்கு தூண்டிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நெல்லை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் என் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது. தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரசாமியிடம் நான் நேரடியாக பணம் கேட்டு மிரட்டியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நெல்லை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி வாதிடும்போது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தால், அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதி மன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றனர்.
சிபிசிஐடி போலீஸார் சார்பில் அரசு வழக்கறிஞர் மயில்வாகன ராஜேந்திரன் வாதிட்டார்.
அப்போது விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதி, சிபிசிஐடி போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர் டிச.7-ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆஜராக விலக்கு அளித்து, விசாரணையை டிச. 10-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.