

10 பேர் கொண்ட மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினர்கள், முதல்வர் ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை நடத்தினர். குழு உறுப்பினர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தகுதியான சமூக ஆர்வலர்கள், துறை நிபுணர்கள், பொருளாதார அறிஞர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையை அரசு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு செயல்பட்டு வருகிறது. அதேபோன்று முதல்வருக்கு ஆலோசனை கூற சட்டப்பேரவைக் கட்சி உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் உள்ளார்.
இதேபோல் மாநில வளர்ச்சிக் கொள்கையை உருவாக்க ஒரு குழுவை நியமனம் செய்து உத்தரவிட்டார். இந்தக் குழுவில், பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் துணைத் தலைவராகவும்; பேராசிரியர் ராம.சீனுவாசன் முழு நேர உறுப்பினராகவும், பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.
இந்தக் குழுவின் பணி, மாநில வளர்சிக்கான இலக்கை நிர்ணயிப்பது, கண்காணிப்பது, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனைகளை அளித்தல், கொள்கை ஒத்திசைவை உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்டவை ஆகும். இந்தக் குழுவினர் ஜெயரஞ்சன் தலைமையில் இன்று காலை முதல்வரைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இக்குழுவில் உள்ளவர்களுக்குத் துறை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
1. ஜெயரஞ்சன் - விவசாயக் கொள்கை மற்றும் திட்டமிடல்,
2. ஆர்.சீனிவாசன் - திட்ட ஒருங்கிணைப்பு,
3. சி.விஜயபாஸ்கர் - கல்வி மற்றும் வேலைவாய்ப்பு,
4. சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்- நிலப் பயன்பாடு,
5. எம்.தீனபந்து (ஓய்வு ஐஏஎஸ்) - ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்டமிடல்,
6. டி.ஆர்.பி.ராஜா (சட்டப்பேரவை உறுப்பினர்)- விவசாயக் கொள்கை மற்றும் திட்டமிடல்,
7.மல்லிகா சீனிவாசன் (தொழிலதிபர்) - தொழிற்சாலை, எரிசக்தி மற்றும் போக்குவரத்து,
8. மருத்துவர் ஜெ.அமலோற்பவநாதன் - சுகாதாரம் மற்றும் சமூக நலன்,
9.சித்த மருத்துவர் கு. சிவராமன் - சுகாதாரம் மற்றும் சமூக நலன்,
10. நர்த்தகி நடராஜ் -சுகாதாரம் மற்றும் சமூக நலன்.
இவ்வாறு அரசு உத்தரவிட்டுள்ளது.