Published : 19 Dec 2015 06:18 PM
Last Updated : 19 Dec 2015 06:18 PM

அதிமுக அரசை விமர்சிக்க மார்க்சிஸ்ட் எப்போதும் தயங்கியதில்லை: கருணாநிதிக்கு ஜி.ராமகிருஷ்ணன் பதில்

அதிமுக அரசை விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தயங்கியதில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி – பதில் வடிவ அறிக்கையில், ‘‘தற்போதைய மழை, வெள்ள பாதிப்புக்கு ஒரு சிலர் திமுக ஆட்சியையும் சேர்த்து குறை சொல்கிறார்களே? குறிப்பாக நால்வர் அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனே சொல்லியிருக்கிறாரே? என கேள்வி எழுப்பி, அதிமுக அரசை நேரடியாக விமர்சிக்க அஞ்சுபவர்கள், திமுகவை விமர்சித்து விட்டு அதன் தொடர்ச்சியாக அதிமுகவை விமர்சிக்கிறார்கள். அவர்களின் உள்நோக்கமும், கபட வேடமும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து வருகிறது’’ என்று பதிலும் சொல்லியிருக்கிறார்.

மக்கள் நலக் கூட்டணியை நால்வர் அணி என்று கூறியிருப்பதன் மூலம் திமுக விரும்பும் கூட்டணியை அமைக்க முடியவில்லை என்பதன் விரக்தி வெளிப்பட்டுள்ளது தெரிகிறது.

எந்த அரசாக இருந்தாலும் ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக்கேட்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் தயங்கியதில்லை. இதனை கருணாநிதியே நன்கறிவார். திமுகவுடன் தேர்தல் உடன்பாடு இருந்த காலத்திலேயே திமுகவிடம் தவறு என்று பட்டதை பளிச்சென்று சொல்லும் நேர்மையும், துணிவும் வெளிப்பட்டதை அவர் அறிவார்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்து கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இது அரசின் கிரிமினல் நெக்லிஜென்ஸ் என குற்றம்சாட்டியதோடு, ஏற்பட்ட பேரிடருக்கும், உயிரிழப்புக்கும் முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்திருந்தோம். அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தியது.

தற்போது ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புக்கும், மக்களின் துயரங்களுக்கும் அதிமுக உடனடி காரணம். திமுகவும், அதிமுகவும் தொடர்ச்சியான காரணம். ஆற்று மணல், தாது மணல் திருடியவர்கள் மீது அதிமுக, திமுக இரண்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற கிரானைட் முறைகேடுகளில் அரசுக்கு ரூ. 1 லட்சத்து 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த 20 ஆண்டுகள் என்பதில் திமுக ஆட்சியும் உண்டு. இதற்கு கருணாநிதி பதில் கூறுவார் என நம்புகிறோம்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x