

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சிறந்த வீரர்களை உருவாக்கும் விதமாகவும் கடந்த 2010-ம் ஆண்டு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் உருவாக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, தண்டலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழக அரசின் நிதி, நமக்கு நாமே நிதி மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 34 மீட்டர் நீளம், 23 மீட்டர் அகலத்தில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டது. இந்த அரங்கு டேபிள் டென்னிஸ், கேரம், செஸ், டேக்வாண்டோ, குத்துச்சண்டை, பளுதூக்குதல், வாலிபால், பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடும் வகையிலும், இருபுறத்திலும் 500 பேர் அமரக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டு வீரர்கள் ஓய்வறை, கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளம் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையடுத்து, அரங்கத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்திடம் பல மாதங்களுக்கு முன்பே பொதுப்பணித் துறையினர் ஒப்படைத்துவிட்டனர்.
ஆனாலும், இந்த விளையாட்டு அரங்கு இதுவரை வீரர்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.
இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கிடையாது. தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அரங்கத்தை உரிய காலத்தில் திறந்தால் அதன் மூலம் கிராமப்புற விளையாட்டு வீரர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது. இதை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. திறப்பு குறித்து தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.