Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது; போக்குவரத்து அதிகரிப்பு; கடைகளில் குவிந்த மக்கள்: குறைந்துவரும் தொற்று மீண்டும் அதிகரிக்கும் என ஆர்வலர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு,தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள்திறக்கப்பட்டதால் சாலைகளில் வாகனப் புழக்கம் அதிகரித்துள்ளது. கடைகளில் அதிக அளவு மக்கள் கூடுவதால், கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடந்த மே 24-ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. 2 வாரங்களாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று காலையுடன் முடிவடைந்தது.

இதையொட்டி, சில தளர்வுகளுடன் முழு முடக்கத்தை ஜூன் 14 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டார். அதில் தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர்,ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளும், தொற்று குறைந்த சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன்கடைகள், காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்காலை 6 முதல் மாலை 5 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு செயல்படலாம். அனைத்து அரசுஅலுவலகங்களும் 30 சதவீதபணியாளர்களுடன் செயல்படலாம். சார் பதிவாளர் அலுவலகங்களில் தினசரி 50 சதவீத டோக்கன் வழங்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளலாம். தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்துமற்ற மாவட்டங்களில், தனியார் சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு சேவைகள், மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுதுநீக்குபவர், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் புரிபவர்கள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மின்பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடைகள், பழுதுபார்க்கும் கடைகள், கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 முதல் மாலை 5மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் இ-பதிவு பெற்று பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை, பகல், மாலையில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நேரத்தில்இயங்கவும் உணவு விநியோகநிறுவனங்கள் மூலம் விநியோகம்செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்வர்த்தக நிறுவனங்கள் மாலை 6 வரை இயங்கலாம்.

இந்நிலையில், வாகனங்களில் செல்வதற்கு இ-பதிவு அவசியம் என்பதால், தமிழகம் முழுவதும் பலரும் நேற்று காலை இ-பதிவுக்கு விண்ணப்பித்தனர். இதனால், இ-பதிவுக்கான இணையதளமே முடங்கியது. அதை சீரமைக்கும் பணியில் தகவல் தொழில்நுட்பத் துறையினர் ஈடுபட்டனர்.

இதுதவிர, பல்வேறு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள்தவிர மற்ற பகுதிகளில் மீண்டும்வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும், கடைகளில் சமூகஇடைவெளி இல்லாமல் மக்கள்கூடுவதாலும், குறைந்துள்ள தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

எனவே, சமூக இடைவெளி கடைபிடிக்காதது, முகக் கவசம் அணியாதது ஆகியவற்றுக்கு அபராதம் விதித்தல், வழக்கு பதிவுசெய்தல், தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோர் மீது நடவடிக்கைஎடுத்தல் போன்றவை அவசியம்என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x