

முதல்வர் மேற்கொண்ட ஆய்வின் பலனாக கோவையில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கோவையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் அர.சக்கர பாணி, கா.ராமச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், கோவை மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன், கே.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநகரில் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மேற்கொண்ட ஆய்வின் பலனாக, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி மிகவும் சிரமப் படுகிறார்கள். இதனாலேயே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களாக கரோனா தடுப்பு பணிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறோம். மாநகரில் புதிய குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு முதன்மைச் செயலர் சிவ்தாஸ் மீனா கூறும்போது, “கோவை மாநகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதிதீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது 13 சதவீதமாக குறைந்துள்ளது. கரோனா படுக்கை மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை” என்றார்.
முன்னதாக, மாநகராட்சியில் பணிபுரிய தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 100 செவிலியர்களுக்கான பணி ஆணையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
தொடர்ந்து, சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் செயல்படும் தடுப்பூசி முகாம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தம், மாநகராட்சி கலையரங்கில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையம், உக்கடம் பெரிய குளத்தில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணி, ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை, குடிநீர் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.