

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தமிழகம் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது, என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்துப் பேசியதாவது:
கடந்த ஒரு மாத காலத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதனால், மிகப்பெரிய அளவிலான பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் படுக்கை வசதிகள் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பிரச்சினை பெரிய அளவில் தீர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி மருத்துவமனைகளில் 37 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன.
தமிழகத்துக்கு தடுப்பூசி கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ரூ.100 கோடி மதிப்பில் 18 வயது முதல் 44 வயதிற்குள்ளானவர்களுக்கு தடுப்பூசி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு தொகுப்பில் இருந்து 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 960 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 97 லட்சத்து 6 ஆயிரத்து 657 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 42 லட்சம் தடுப்பூசி தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மருத்துவர் இடமாற்றம் நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு சிகிச்சை மையம்
முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். கரோனா மையத்தில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை வழங்கினார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
நிகழ்வில், சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், எம்பி ஏ.கே.பி.சின்ராஜ், முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ பி.தங்கமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ராமலிங்கம், பொன்னுசாமி, ஈ.ஆர்.ஈஸ்வரன், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.