

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் காலை 9 முதல் 12.30 வரையும் பிற்பகல் 2 முதல் 5 மணிவரையும் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காலை 8 முதல் 12 மணிவரை நியாய விலைக்கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், நியாய விலைக்கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை துணை ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 14-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி, மளிகைக்கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் காலை 6 முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நியாயவிலைக்கடைகள், அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணிவரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரையும் செயல்படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.
மேலும், கரோனா நிவாரணத்தின் 2-ம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள் தொகுப்பு ஆகியவை வரும் ஜூன் 15-ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வரும் ஜூன் 11 முதல் 14-ம் தேதிவரை கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். அதே நேரம் ஜூன் 11 முதல் 14 வரை காலை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழக்கம் போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.