Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநர் கைது: உண்மைக்கு மாறான காரணம் கூறி இ-பதிவு பெற்று இயக்கப்பட்ட ஆட்டோ பறிமுதல்

சென்னை

ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரிடம் கடும் வாக்குவாதம் செய்த விவகாரம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரோனா இரண்டாவது அலை பரவலை முற்றிலும் தடுக்க தமிழக அரசு மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. பேருந்துகள், வாடகை ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்க அனுமதிக்கப்படவில்லை.

ஊரடங்கு உத்தரவையடுத்து போலீஸார் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக்கியுள்ளனர். அதன்படி, சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில், 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து காவல் நிலைய எல்லைகளையும் செக்டார்களாக வகைப்படுத்தி சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல இ-பதிவு சான்று (பாஸ்) கட்டாயமாக்கப்பட்டு, இ-பதிவு வைத்திராமல் தேவையின்றி சுற்றித் திரியும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பாரிமுனையிலுள்ள பாரதி மகளிர் கல்லூரி அருகே முத்தியால்பேட்டை போலீஸார், சோதனை சாவடி அமைத்து நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை சுமார் 9.45 மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மறித்து அதன் ஓட்டுநர் பெரம்பூர், தில்லைநாயகம் தெருவைச் சேர்ந்த ஆகர் அலி (Aakar Ali) என்பவரிடம் விசாரித்தனர்.

அவர், முதலில் மருத்துவமனை செல்வதாகவும், பின்பு சவாரி செல்வதாகவும் முன்னுக்குப் பின் முரணாக கூறினார். மேலும் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கான அவசர காரணம் என கூறி பெறப்பட்ட இ-பதிவையும் (பாஸ்) காண்பித்துள்ளார்.

ஆனால் வாகனத்தில் அதுபோன்று யாருமில்லாததையடுத்து போலீஸார் அவரிடம் மீண்டும் விசாரித்தனர். அப்போதுதான், ஆட்டோ ஓட்டுர் உண்மைக்கு புறம்பான காரணத்தை கூறி இ-பதிவு பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்யும் பணியை காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா மேற்கொண்டார். இதனால், ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் வீண் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். இதை கண்டு கொள்ளாத உதவி ஆய்வாளர் ஆட்டோவை பறிமுதல் செய்ய முயன்றார்.

ஆட்டோ ஓட்டுநரிடம் சாவியை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. ஆட்டோ சாவியை எடுத்தபோது ஆட்டோ ஓட்டுநர் உதவி ஆய்வாளரின் கையை பிடித்து இழுத்துள்ளார். இதில், உதவி ஆய்வாளர் கிருத்திகா கையில் லேசான நகக் கீறல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் கையில் அணிந்திருந்த காப்பு வளைந்தது.

தொடர்ந்து “என்னுடைய பணியைத்தான் நான் செய்கிறேன்” என்று உதவி ஆய்வாளர் கூறியதுடன் ஆட்டோ ஓட்டுநரைக் கண்டிக்கவும் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர், “ஒரு பொண்ணு... நீயே இப்படி பேசுறியா?” என்று உதவி ஆய்வாளரை இழிவாகப் பேசியுள்ளார். அங்கிருந்தவர்கள் அவருக்கு அறிவுரை கூறியபோதும், அதை கேட்காத ஆட்டோ ஓட்டுநர் ஆகர் அலி ஆபாசமாக பேசியதோடு மட்டுமல்லாமல் உதவி ஆய்வாளரை ‘நீ நாசமா போய்டுவ’ என்று சபித்துள்ளார்.

பின்னர் திடீரென ஒருவருக்கு போன் செய்து, அவருடன் பேசுமாறு உதவி ஆய்வாளரை வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த உதவி ஆய்வாளரை நோக்கி, “அமைச்சர் சேகர்பாபுகிட்ட பேசுறியா?” என்று ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார். பின்னர், ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்றார். இதையடுத்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்டோ ஓட்டுர் ஆகர் அலியின் செயல் அந்த வழியாக சென்ற அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இதற்கிடையே, இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது. ஆட்டோ ஓட்டுநர் பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் இப்படி நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் வழக்கறிஞர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்

சேத்துப்பட்டில் நேற்று முன்தினம் போக்குவரத்து போலீஸாரிடம் விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்ட பெண் வழக்கறிஞர் தனுஜா கத்துலா மீது போலீஸார் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சேத்துப்பட்டு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க பெண் வழக்கறிஞர் தனுஜா கத்துவாலா போலீஸாரை திட்டிக் கொண்டு தனது காரில் வேகமாக ஏறிச் செல்லும் மற்றொரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஜா போலீஸாருக்கு எதிரான மனநிலையில் இதுபோன்று வீண் தகராறில் அவ்வப்போது ஈடுபட்டு வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இதேபோல் யார் வேண்டுமானாலும் காவல்துறையினரை தேவையில்லாமல் திட்டும் நிலை ஏற்படும் என களப்பணியாற்றும் போலீஸார் கவலை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x