Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

சென்னையில் காவலர்களிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்; போலீஸாருக்கு ‘பாடி வோன் கேமராக்கள்’- மீண்டும் வழங்க காவல் துறையினர் கோரிக்கை

சென்னையில் அடுத்தடுத்து போலீஸாரிடம் நடைபெறும் அத்துமீறல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் களத்தில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் பாடி வோன் கேமராக்களை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீஸாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது ஆங்காங்கே வழக்கமாகி விட்டது. இதில், இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்துவார்கள். இதனால், யார் தரப்பில் உண்மை உள்ளது என்பதை துல்லியமாகக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளிடம் நடத்தும் விசாரணைகள் குறித்து அறிய நவீன ‘பாடி வோன் கேமராஸ்' (Body worn Cameras) திட்டம் சென்னையில் காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் இருக்கும்போது 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது.

முதல்கட்டமாக சென்னையில் தேனாம்பேட்டை, மெரினா, கோயம்பேடு, பூக்கடை ஆகிய 4 போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு இந்த கேமராக்கள் வழங்கப்பட்டன. இந்தக் கேமராவை சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் வாகன சோதனையின்போது தனது சீருடையின் முன் பகுதியில் பொருத்திக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபட்டாலும், நேர்மையாக செயல்படும் போக்குவரத்து போலீஸார் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும் கூற முடியாது. இதனால், இது பொதுமக்கள் மற்றும் போலீஸாரிடையே வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து போலீஸாருக்காக 202 ‘பாடி வோன் கேமராக்கள்’ வாங்கப்பட்டன.

‘பாடி வோன் கேமராக்கள்’ எதிரில் உள்ள வாகன ஓட்டிகளை தெளிவாகப் படம் பிடிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகளின் உரையாடல்கள் துல்லியமாக பதிவாகும். 15 அடி தூரத்தில் நின்று பேசினால் கூட ஒலி, ஒளியைப் பதிவு செய்ய முடியும். 360 டிகிரி சுழலும். 15 நாட்கள் வரை தொடர்ந்து பதிவு செய்து கொள்ள முடியும். ஜிபிஎஸ் கருவியை கேமராவில் பொருத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலர் எங்கு உள்ளார் என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்கலாம். போலீஸார் அதை அழித்தாலும் அதை கண்டுபிடிக்க முடியும். இந்தக் திட்டம் தற்போது பயன்பாட்டில் இல்லை.

தற்போது, சேத்துப்பட்டு மற்றும் முத்தியால்பேட்டை என இருவேறு இடங்களில் அடுத்தடுத்து போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் வாகன ஓட்டிகளின் அத்துமீறல் அதிக அளவு உள்ளது. போலீஸாருக்கு ‘பாடி வோன் கேமரா’ வழங்கப்பட்டிருந்தால் எதிரில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவார்கள். போலீஸாரும் தவறு செய்ய அச்சப்படுவார்கள்.

எனவே, பாடி வோன் கேமராஸ் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி களத்தில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் வழங்க வேண்டும் என போலீஸார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x