

பரங்கிப்பேட்டையில் 10 இளைஞர்கள் ஒன்று கூடி ‘தர்மம் செய்வோம்’ என்ற ஒரு குழுவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினர். ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை இக்குழுவினர் செய்து வருகின்றனர்.
தற்போது கரோனா ஊரடங்கால் ஏழை எளியோர் மற்றும் சாலையோரவாசிகள் உணவின்றி தவித்து வரும் நிலையில் இந்த அமைப்பினர் பரங்கிப்பேட்டையில் ‘அன்புச் சுவர்’ என்ற பெயரில் புதிதாக உணவு வழங்கும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
‘பசிக்கிறதா தேவையெனில் உணவு எடுத்துக் கொள்ளலாம்’ என அறிவிப்பு வெளியிட்டு, இந்த ‘அன்புச் சுவரை’ தொடங்கியிருக்கின்றனர்.
இதற்காக, பரங்கிப்பேட்டை வண்டிகார தெரு முனையில் இருக்கும் அஞ்சல் நிலையம் அருகில் ஒரு சுவற்றை ஒட்டி தள்ளுவண்டி ஒன்றை அமைத்துள்ளனர். இதில், எளிய மக்கள் பசியாறும் வகையில் வாழைப்பழம், பிரட், தண்ணீர் பாட்டில், பிரியாணி, சாப்பாடு உள்ளிட்டவைகளை வைத்துச் செல்கின்றனர்.
“பசியால் இருப்பவர்கள் மற்றும் தேவை உள்ளவர்கள் மட்டுமே இந்த உணவுகளை எடுத்துச் செல்லலாம். ஊரடங்கு முடியும் வரை, எங்கள் சேவை தொடரும்” என்கின்றனர் ‘தர்மம் செய்வோம்’ குழுவினர். மேலும் இவர்கள், சில இடங்களுக்கு உணவுப் பொட்டலங்களை ஆட்டோக்களில் எடுத்துச் சென்று இலவசமாக விநியோகம் செய்து வருகின்றனர்.