வெளியூர்களில் இருந்து பூக்கள் கொள்முதல் செய்ய வராததால் மல்லிகையை ரூ.150-க்கு விற்ற வியாபாரிகள்

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மல்லிகைப்பூக்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மல்லிகைப்பூக்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

வெளியூர் வியாபாரிகள் பூக்கள் வாங்க வராததால், மதுரை மல்லிகை நேற்று கிலோ ரூ.150-க்கு விலை போனது. பூ வியாபாரமே இன்றி விவசாயிகள் பலரும் செடிகளில் பூக்கள் பறிப்பதையே கைவிட்டனர்.

கரோனா ஊரடங்கால் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைமைய வளாகத்தில் செயல்பட்ட பூ மார்க்கெட், ஆம்னி பஸ் நிலையத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டது.

தற்போது ஓரளவு தளர்வு அறிவிக்கப்பட்டதால் நேற்று முதல் மீண்டும் பூ மார்க்கெட் மாட்டுத்தாவணி வேளாண்மை ஒழங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் செயல்படத் தொடங் கியது. ஆனால், பூக்கள் வாங்க வியாபாரிகளும், மக்களும் அவ்வளவாக வரவில்லை. கோயில்கள் திறக்காததால் நித்திய பூஜைகளுக்குத் தேவையான மலர்கள் விற்பனை முடங்கியது. கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு கூட வண்ண மலர்களை வாங்க ஆளில்லை. மதுரை மல்லிகையும் நேற்று கிலோ ரூ. 150-க்கு விற்றது.

வழக்கமான நாட்களில், இந்த மாதத்தில் சந்தைக்கு 5 டன் முதல் 10 டன் பூக்கள் வரத்து இருக்கும். ஆனால், நேற்று 2 டன் மட்டுமே வந்தது. அதுவும் விற்பனை ஆகாததால், எப்போதும் கிலோ ரூ. 1,500-க்கு விற்கும் மல்லிகை நேற்று ரூ. 150-க்கு விற்றது.

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது: ஒட்டுமொத்த பூ வியாபாரமே பாதிக்கப்பட்டுள்ளது. கரோனாவில் இருந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே பூ வியாபாரம் தலை யெடுக்கும். தற்போது அரளி பூ மட்டுமே ஓரளவு விற்பனையாகிறது. அந்த பூக்கள் கிலோ ரூ.200-க்கு விற்கிறது. மல்லிகை கிலோ ரூ.150, முல்லைப்பூ ரூ.120, பிச்சிப்பூ ரூ.150, மரிக்கொழுந்து ரூ.50, சம்பங்கி ரூ.30 செண்டுப்பூ ரூ.30-க்கு விற்கிறது. வழிபாட்டுத் தலங்களும் திறந்து முழு அளவில் பஸ் போக்குவரத்து இயங்கினால் மட்டுமே வெளியூர் வியாபாரிகள் வரத் தொடங்குவர்.

விவசாயிகள் பலர் பூ வியாபாரம் இல்லாததால் செடிகளில் பூக்கள் பறிப்பதையே விட்டுவிட்டனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in