Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் தட்டுப்பாடு; கரோனா தடுப்பூசி போடும் பணி 4 நாட்களாக நிறுத்தம்: சுகாதார நிலையங்களில் காத்திருந்து ஏமாறும் பொதுமக்கள்

தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி மையத்தில் கரோனா தடுப்பூசி இல்லாததால் அங்கிருந்த பணியாளரிடம் விசாரிக்கும் பொதுமக்கள். படம்: என்.ராஜேஷ்

திருநெல்வேலி/ நாகர்கோவில்/ தென்காசி/ தூத்துக்குடி/ கோவில்பட்டி

கரோனா தடுப்பூசிக்கு கடந்த 4 நாட்களாக நீடிக்கும்கடும் தட்டுப்பாடு காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

கரோனா வைரஸ் தொற்றுவராமல் இருக்க தடுப்பூசி மட்டுமே ஒரே பேராயுதமாக இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், சிறப்பு முகாம்களும் நடைபெற்றன.

இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஒருவாரமாக போதுமான தடுப்பூசிகள் இல்லாததால், பொதுமக்களை சுகாதாரத்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர்.

ஒரு சில மையங்களில் மறுநாளைக்கு வருமாறு கூறி டோக்கன் வழங்கினர். அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கும், அடுத்த நாள் தடுப்பூசி போடமுடியாத அளவுக்கு தட்டுப்பாடு நிலவியது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, பெருமாள்புரம் நகர்நல மையம் உள்ளிட்ட ஒருசில தடுப்பூசி மையங்களுக்கு, குறைந்தஅளவுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன. அவற்றைக்கொண்டு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற னர். பாளையங்கோட்டை மத்தியசிறையில் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம் நேற்று நடத்தப்பட்டது. ஓரிரு நாட்களில் தட்டுப்பாடு தீரும் என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கெனவே வந்திருந்த 15 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், கடந்த3 நாட்களாக தடுப்பூசி போடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் தினமும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதும், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதும் தொடர்கிறது. நேற்று முன்தினம் 1,000 கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன. இவை நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த சிறப்பு முகாமில் டோக்கன் வழங்கப்பட்டு போடப்பட்டன. பல மணி நேரமாக வரிசையில் காத்து நின்றவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். மாவட்டத்தில் இதுவரை முதல் கட்ட தடுப்பூசி 1,60,450 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 46,429 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 88 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தினமும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதுவரை, 1,44,432 பேர் முதல் டோஸ், 29,108 பேர் 2-ம் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி அறவே இல்லை. கோவாக்சின் குறைந்த அளவில் உள்ளது. அதனை கொண்டு 2-வது டோஸ் போடுவோருக்கு மட்டுமே போடுகின்றனர்.

தடுப்பூசி மையங்களுக்கு ஆர்வமுடன் வரும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பல மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களும் கடந்த சில நாட்களாக நடத்தப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறும்போது, ``500 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. 2-வது டோஸ் போடுவோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. ஓரிரு நாட்களில் தடுப்பூசிகள் வந்துவிடும்” என்றார் அவர்.

கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு கடந்த 2-ம் தேதி 5,000 டோஸ் கோவிஷீல்டும், 1,000 டோஸ்கோவாக்சினும் ஒதுக்கப்பட்டிருந்தன. இவை மறுநாள் 3-ம் தேதிமக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டன. கடந்த 5-ம் தேதி கோவாக்சின் 500 டோஸ்கள் ஒதுக்கப்பட்டன. அவையும் பிரித்து வழங்கப்பட்டுவிட்டன. அடுத்த ஒதுக்கீடு வந்தவுடன், பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என, சுகாதாரத்துறையின் தெரிவித்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1,20,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தடுப்பூசி பணி நடைபெறவில்லை. சுகாதாரத் துறை துணை இயக்குநர் யோகாநந்த் கூறும்போது, “கடந்த வாரம் 7,500 டோஸ் தடுப்பூசிகள் தென்காசி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. அவை அனைத்தும் 5 நாட்களுக்குள் மக்களுக்கு செலுத்தப்பட்டது. கடந்த 5-ம் தேதி வந்த 1,000 டோஸ் தடுப்பூசி ஒரே நாளில் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் தடுப்பூசிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x