Last Updated : 08 Jun, 2021 03:14 AM

 

Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

மனித உடலில் கருப்பு பூஞ்சை உருவாவது எப்படி? - தாவரவியல் பேராசிரியர் விளக்கம்

புதுக்கோட்டை

மனித உடலில் கருப்பு பூஞ்சை எப்படி உருவாகிறது என்பது குறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாவரவியல் துறை பேராசிரியரும், ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வருமான எஸ்.பழனியப்பன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: கருப்பு பூஞ்சை நோய் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. தற்போது கரோனா தொற்றாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், இப்பூஞ்சையைப் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.

உணவுப் பொருட்களை சிதைத்து நஞ்சாக்குவதும், தாவரங்களில் பல்வேறு நோய்களை உருவாக்குவதும்தான் பூஞ்சைகளின் வேலையாகும். அதேபோல, மனிதர்களின் உடல் நலத்துக்கு தீங்கு செய்யும் பூஞ்சைகளும் ஏராளம் இருக்கின்றன. அதில் முதலிடத்தில் இருப்பதுதான் கருப்புப் பூஞ்சை.

பூஞ்சைகள் அனைத்தும் பொதுவாக மைசீட்டுகள் என்ற வகுப்புகளில் வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. அதில், பாசிகளின் பண்பை வெளிப்படுத்தும் பூஞ்சைகள் ஃபைகோமைசீட்டுகள் என்ற வகுப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதில் வரும் ஒரு முக்கியப் பூஞ்சைதான் ரொட்டிக் காளான் எனும் மியூக்கார் பூஞ்சை.

மியூக்காரை போன்ற அமைப்பையும், சைகோஸ்போரை உருவாக்கும் வாழ்க்கைச் சூழலையும் கொண்ட பேரினங்கள் சைகோமைசீட்ஸ் என்ற வகுப்பில், மியூக்கரேல்ஸ் என்ற துறையில் வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த துறையில் வரும் பூஞ்சை களே கருப்புப் பூஞ்சைகளாகும்.

கருப்புப் பூஞ்சைகளால் ஏற்படும் மனித நோய் மியூக்கார் மைக்கோசிஸ் அல்லது ஸைகோமைக்கோசிஸ் என அழைக்கப்படுகிறது.

இப்பூஞ்சை, இனப்பெருக்கத்தின் மூலம் மிக நுண்ணிய தூசு போன்று கருப்பு நிறத்திலான ஸ்போர்களை உருவாக்குகிறது. இந்த ஸ்போர்கள்தான் மனித உடலுக்குள் சென்று வெகுவேகமாக பெருக்கமடைகிறது.கருப்புப் பூஞ்சை கரோனா தொற்றால் புதிதாகத் தோன்றியது அல்ல. உலகம் முழுவதும் காணப்படும் ஒரு மனித நோய்.

4 வகை நோய் மூலம் பாதிப்பு

இந்த கருப்புப் பூஞ்சையானது, நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர் கள், கரோனா தொற்று காலத்தில் அதிக அளவில் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொண்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்களை ரைனோ செரிப்ரல் மைக்கோசிஸ், பல்மோனரி மைக்கோசிஸ், குட்டேனியஸ் மைக்கோசிஸ், காஸ்ட்ரோ இன்டெஸ்டைனல் மைக்கோசிஸ் ஆகிய 4 வகையான நோய்கள் மூலம் பாதிக்கச் செய்கின்றன.

இதில், நீரிழிவால் பாதிக்கப்படுவோருக்கு ரைனோ செரிப்ரல் மைக்கோசிஸ் நோயானது மூளையை பாதிக்கக்கூடியது. புற்று நோயாளிகள், உறுப்பு மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு பல்மோனரி மைக்கோசியஸ் எனும் நோயானது நுரையீரலை பாதிக்கச் செய்கிறது. தீக்காயம், தோலில் உண்டாகும் உணர்வு அதிர்ச்சிக் காயம், அறுவை சிகிச்சையால் தோன்றும் காயங்கள் மூலம் குட்டேனியஸ் மைக்கோசிஸ் தோல் நோயை ஏற்படுத்துகிறது.

குறைமாதத்தில் பிறந்த, அதிக மருத்துவப் பராமரிப்பில் உள்ள குழந்தைகளில் நோய் எதிர்ப்பாற்றல் குறைபாட்டால் காஸ்ட்ரோ இன்டெஸ்டைனல் மைக்கோசிஸ் நோயை உண்டாக்குகிறது.

அதோடு, சைனஸ் எனப்படும் முக உட்புழைகளில் இப்பூஞ்சை அதிக அளவில் வளர்ந்து 4 நாட்களுக்குப் பிறகு கண்களைப் பாதிக்கிறது. இதனால், பார்வை இழப்பு ஏற்படுவதுடன் அறுவை சிகிச்சை மூலம் கண்களை அகற்றும் நிலையும் ஏற்படுகிறது.

குணப்படுத்தும் மருந்துகள்

இந்நோயைக் குணப்படுத்த பூஞ்சை எதிர்ப்பு சக்தியுள்ள ஆம்ஃபோடெரிசின் பி, பொசாகோனஸோல் மற்றும் இசாவுகோனஸோல் போன்ற மருந்துகள் உள்ளன. நம் நாட்டில் கிடைக்கக்கூடிய ஆம்ஃபோடெரிசின் பி மருந்தை பயன்படுத்தி நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நீண்ட நாட்களுக்கு ஒரே முகக்கவசத்தை பயன்படுத்தினாலும்கூட இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x