

மழை குறைந்து, வெள்ளம் வேகமாக வடிந்துவருவதால் ரயில், சாலைப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் சென்னை மாநகரம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
கடந்த திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக பெய்த கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்ட மக்களின் வாழ்க்கை யையே புரட்டிப் போட்டுவிட்டது. ஏரிகளில் உடைப்பு, அதிக உபரிநீர் திறப்பு, ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சென்னை நகரையே உருக்குலைத்துவிட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மாடிகளில் மக்கள் தஞ்சம் புகுந்தனர். ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் துண்டிக் கப்பட்டன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையமும் மூடப்பட்டது. மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால், மாநகரமே இருளில் மூழ்கியது. பல குடியிருப்பு பகுதிகளில் முதல்தளம் வரை வெள்ள நீர் சூழ்ந்தது.
ராணுவத்தின் முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தமிழக காவல் மற்றும் தீயணைப்பு துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் வேகமாக ஈடுபட்ட னர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். தன்னார் வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உட்பட பல அமைப்பினர் உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர்.
இந்நிலையில், கடந்த 2 நாட் களாக மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதை யடுத்து, நேற்று முன்தினம் ஒருசில இடங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியது. வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை யில் இருந்து பெங்களூரு, டெல்லி, மதுரை, திருச்சி, செங்கோட்டை, திருச்செந்தூர், காரைக்கால், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் வழக்கம்போல அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசலுக்கு ஏற்பாடு
மழை வெள்ளம் காரணமாக சென்னை, புறநகர்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து 67 டேங்கர் லாரிகள் மூலம் 475 கிலோ லிட்டர் பெட்ரோலும், 857 கிலோ லிட்டர் டீசலும் தமிழக அரசின் நடவடிக்கைகளால் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னையில் பெட் ரோல், டீசல் சில்லறை விற்பனை 75 சதவீத அளவுக்கு சீரானது.
பால் விநியோகம்
அதேபோல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பால் கிடைக்காமல் அவதிப்பட்டனர். பால் விநியோகத்தை சீர்படுத்த ஆவின் நிறுவனம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. நேற்று மட்டும் 10 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. ஆவின் பால் விநியோகம் இன்று முழு அளவை எட்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
வங்கிகள் திறப்பு
கடந்த 3 நாட்களாக அரசு மற்றும் தனியார் வங்கிகளின் செயல்பாடு முற்றிலும் முடங்கியது. ஏ.டி.எம். மையங்களும் செயல்படவில்லை. இதனால் வங்கி சேவை கிடைக்கா மல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வங்கி சேவையை இயல்புநிலைக்கு கொண்டுவர நிர்வாகங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஏ.டி.எம். மையங்கள் சரிசெய்யப் பட்டன. மக்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடுபாதை முழுவதும் வெள்ளம் தேங்கியதால் சென்னை விமான நிலையம் கடந்த 2-ம் தேதியில் இருந்து மூடப்பட்டுள்ளது. விமான சேவை தொடங்க இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெள்ளம் வடியத் தொடங்கி யுள்ளதால், சென்னையில் இருந்து சில உள்நாட்டு விமான சேவை மட்டும் இன்று காலை 10 மணிக்கு பிறகு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் அதிகரித்த நிலையில் 11 நகரும் பண்ணை பசுமைக் கடைகள் மூலம் 32 இடங்களில் காய்கறி விற்பனைக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு, அவர் களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை அளிப்பதில் அரசும், ஏராளமான தொண்டு நிறுவனங் களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின் றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 30 மருத்துவக் குழுக்கள் மூலம் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக சென்னை மாநகரில் மெல்ல மெல்ல மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது. மழை விட்டுவிட்டு பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மழை குறையும் பட்சத்தில் அடுத்த சில நாட்களில் இயல்புநிலை முழுமையாக திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதிலும் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது.
வெள்ளத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் மத்திய அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.