Published : 08 Jun 2021 03:15 am

Updated : 08 Jun 2021 08:05 am

 

Published : 08 Jun 2021 03:15 AM
Last Updated : 08 Jun 2021 08:05 AM

தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தில் புதிய மாற்றம்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

tenpennai-palaru-link-project
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவி களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அருகில், மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை சிரமம் இல்லாமல் காக்கங்கரை ஏரி வழியாக நிறைவேற்ற ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதி யில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 484 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வரவேற்றார்.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘தேர்தல் நேரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். அந்த வகையில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் ஆகியுள்ள மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற துறையை உருவாக்கி அதற்கு தனி அலுவலர்களை நியமித்து பெறப் பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோட்டையில் முதல மைச்சர் அலுவலகம் இயந்திரம் போல் இயங்கி வருகிறது. கரோனா பரவல் தடுப்புப் பணியாக இருந்தாலும் சரி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என ஸ்டாலினின் உழைப்பைப் பார்த்து நான் அசந்து விடுகிறேன். தென்பெண்ணை ஆற்றில் இருந்து வீணாகும் தண்ணீரை பாலாற் றுக்கு திருப்பிவிட்டால் ஆண்டுக்கு மூன்று மாதங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இந்த திட்டத்தை என்னுடைய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால், இவர்கள் வேறு திட்டத்தை மாற்றி வைத்திருக் கிறார்கள். தென்பெண்ணையில் இருந்து தண்ணீரை திருப்பத்தூர் அருகேயுள்ள காக்கங்கரை ஏரிக்கு கொண்டு வந்தால் சிரமம் இருக்காது. இந்த திட்டத்தை மாற்றி அறிக்கை கேட்டிருக்கிறேன். அதேபோல், பாலாற்றின் குறுக்கே எங்கெல்லாம் தடுப்பணை கட்ட முடியும் என்ற அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெறுகிறது.

மோர்தானா அணையை வரும் 18-ம் தேதி வாக்கில் திறக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். முன்னதாக, அணையின் இடது, வலது காய்வாய் சீரமைப்பு பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். கால்வாய் கரையை உடைத்து தண்ணீரை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், கடைமடை வரை தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்.

மதுரை, திருச்சி போன்ற பேருந்து நிலையங்கள் பார்ப்பதற்கு எப்படி உள்ளன. ஆனால், வேலூர் புதிய பேருந்து நிலையம் அப்படி இல்லை. முன்பக்கம் உள்ள இடத்தை பயன்படுத்துவது குறித்துவிரைவில் ஆய்வு செய்ய உள்ளேன்.அதேபோல், கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள மின் கம்பத்தை அகற்றினால் அங்கு ஒரு சாலையை போட முடியும். இதையெல்லாம் மாற்ற வேண்டும்’’ என்றார்.


தென்பெண்ணைபாலாறு இணைப்பு திட்டம்புதிய மாற்றம்நீர்வளத்துறை அமைச்சர்துரைமுருகன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x