Published : 07 Jun 2021 06:28 PM
Last Updated : 07 Jun 2021 06:28 PM

ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் பதிவினால் முடங்கிய இ-பதிவு இணையதளம்: சரி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அதில் சுயதொழில் புரிவோர் இ-பதிவு செய்து, செயல்பட அனுமதிக்கப்பட்டதால் இன்று காலை பலரும் பணிக்குச் செல்ல ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் இ-பதிவு இணையதளம் முடங்கியது. பின்னர் மாலையில் அது சரி செய்யப்பட்டது.

தமிழகத்தில் மே 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. ஜூன் 7 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலானது. அவசியத் தேவைகளுக்குச் செல்பவர்கள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டது. இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தொற்றுப் பரவல் குறைந்ததை அடுத்து தொற்று குறையாத 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் மெக்கானிக்குகள், பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் செயல்படவும், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக் பொருட்கள், ஹார்ட்வேர் கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் பெருமளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வெளியில் செல்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், கட்டாயம் இ-பதிவுடன் செல்ல வேண்டும் என்கிற அறிவிப்பு வெளியானது. அதற்காகத் தமிழக அரசின் இ-பதிவு பக்கத்தில் சுயதொழில் செய்பவர்களுக்காகப் புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் அரசின் தளர்வு காரணமாக பணிக்குச் செல்லும் சுயதொழில் புரிவோர், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பணிக்குச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்று காலை பணிக்குச் செல்வோர், வெளியில் செல்வோர் எனத் தமிழகம் முழுவதும் இ-பதிவுக்காகப் பலரும் பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்ததால் இணையதளம் முடங்கியது.

இந்நிலையில், இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். ''ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய இணையதளத்திற்கு வந்த காரணத்தால்தான் இணையதளம் முடங்கியது. விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மாலையில் இணையதளம் சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x