

பாடப்புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் குறித்துத் தவறாகச் சித்தரிக்கப்பட்ட விவகாரத்தில் திமுக ஆட்சியில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’கடந்த ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்குச் சென்று அழைத்துவந்து, மருத்துவமனையில் அனுமதித்து அவர்கள் குணமடைந்த பின்பு பூங்கொத்துக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். இறந்தவர்களுக்கு உரிய மரியாதை செய்யப்பட்டது.
தற்போது 100 நோயாளிகளில் 5 பேரைக்கூட மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை. 80 சதவீத நோயாளிகளை வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ள சொல்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய படுக்கை வசதி, உணவு வசதி வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வருகின்றன.
நோயாளிகளைக் கவுரவமாக நடத்தவேண்டும். இறந்தவர்களின் சடலத்தைத் தூக்கி வீசுவது வருத்தமளிக்கிறது. கரோனா தேசியப் பேரிடர் சட்டம் 2005-ன் படி மத்திய அரசு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் நிதி வழங்க வேண்டும். கரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு, கரோனாவால் இறந்தார் என்று இறப்பு சான்றிதழ் வழங்கவேண்டும். இப்படி வழங்கினால்தான் இந்நிதியைப் பெற முடியும்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகள், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது. வீட்டில் சிகிச்சை பெறும் 80 சதவீத நோயாளிகளில் இறப்பவர்கள் கணக்கில் காட்டப்படுவதில்லை. இறப்பை மறக்காமல், உண்மையைத் தெளிவுபடுத்துங்கள்.
ஆலோசனை நடத்தக்கூட முதல்வரின் அனுமதியா?
30 நாட்கள் திமுக ஆட்சியைப் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றில் 3 நாட்களுக்கு முன்பு வெளியான செய்தியில், சுகாதார, போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சர்கள், தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. தன் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தவே முதல்வரின் அனுமதி வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் நிலை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எங்கள் ஆட்சி மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்தார். ஊரடங்காலும், என் உடல்நிலை சரியில்லாததாலும் இன்றுதான் வெளியே வந்தேன். அவர், கடந்த அதிமுக ஆட்சியில் திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மீது திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் எம்.ஏ. வரலாறு பாடத்தில் ஒரு பாடம் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அப்படி இருப்பது தவறுதான். கண்டிக்கப்பட வேண்டியதுதான்.
இது 2005ம் ஆண்டு எழுப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போது நான்தான் கல்வித்துறை அமைச்சர். மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த தங்கராஜ் எழுதியுள்ளார். பொன்முடி சொல்லும்வரை இது எங்கள் கவனத்திற்கு வரவில்லை. 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்? அவர் சார்ந்த கட்சி மீது சொன்னதை ஏற்றுக் கொண்டாரா? அதன் பின் 5 ஆண்டுகள் சட்டப்பேரவையில் என்ன செய்தார்?
அதிமுக தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டவர் எம்ஜிஆர். அவர் மறைவுக்குப் பின் நாங்கள்தான் அதிமுக என்றவர்கள் காணாமல் போன சரித்திரத்தை அதிமுக பார்த்துள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு ரூ.200 கோடிக்கான பணிகளையும் நிறுத்த வேண்டும் எனத் திட்ட அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளைத் தொடர்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்’’.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.