Published : 07 Jun 2021 03:03 PM
Last Updated : 07 Jun 2021 03:03 PM

ரூ.250 கோடி மதிப்புள்ள வடபழனி கோயில் நிலம் மீட்பு: ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு தொடர்ந்து நடக்கும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை

கோயில் நிலம், அறநிலையத்துறை சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் 100 நாளில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை சாலிகிராமத்தில், வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலத்தைத் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து அறநிலையத்துறை மீட்டுள்ளது, அதற்கான பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் நடவடிக்கை உறுதி எனக் குறிப்பிட்டார். விரைவில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

“நீண்ட காலமாக கோயில் நிலங்களைத் தனியார்கள் யாரும் எடுத்துக்கொள்ள உரிமை கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. ஆனால், மக்கள் நலன் கருதி அவர் நீண்ட காலம் இருந்தால், அந்த நிலம் வேறு பயன்பாட்டுக்கு இல்லை எனக் கருதினால் அவர்களுக்கே அதை வாடகைக்கு, நன்றாக கவனியுங்கள் அவர்கள் உரிமையாக்கிக் கொள்ள அல்ல, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாடகைக்கு விடப்படும். இந்து சமய அறநிலையத்துறைத்தான் அதை நிர்வகிக்கும்”.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

தற்போது கைப்பற்றப்பட்ட 5.5 ஏக்கர் இடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவீர்களா?

இந்தக் கேள்வியை யாராவது கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன், கேட்டீர்கள். கைப்பற்றப்பட்டுள்ள இந்த இடத்தை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் விதத்தில் சமுதாய நோக்கத்தோடு பயன்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அனைவரும் கலந்தாலோசித்து, இந்த இடத்தில் எது வந்தால், ஏழை மக்கள், அடித்தட்டு மக்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட உண்டான திட்டம் நிச்சயம் செயல்படும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

எந்த நகராக இருந்தாலும் அது யாராக இருந்தாலும் நிச்சயம் அனைத்து இடங்களையும் கைப்பற்றுவோம். இந்து சமய அறநிலையத்துறைக்கு வரவேண்டிய வருவாயை யார் மடைமாற்றம் செய்தாலும் அந்த மடைமாற்றத்தைத் திருப்பி இந்து சமய அறநிலையத்துறைக்கு அந்த வருமானத்தை ஈட்டி அந்த இடத்தை சட்டப்படி மீட்போம்.

கோயில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை நடக்கிறது. தமிழில் நடத்தப்படுவதில்லையே?

தற்போது கரோனா காலம் என்பதால் கோயில்கள் பூட்டப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அனைத்தும் சரியாகி இயல்பு நிலை வரும்போது நிச்சயம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது எப்போது?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 100 நாளில் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x