

'இந்து தமிழ்' நாளிதழில் தொடர் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்திலேயே முதல் முறையாக, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மருத்துவமனை கட்டணத்தை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, "அதி தீவிர மற்றும் அதி தீவிரமில்லாத அனைத்து நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
தேவையான மருந்துகள் மற்றும் அனைத்துப் பரிசோதனைகளுக்குமான கூடுதல் கட்டணம், பயனாளிகள் சார்பில் மருத்துவக் காப்பீடு நிறுவனம் மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும்" என அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பல தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நோயாளிகளை அனுமதிப்பதில்லை என புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாகக் கடந்த மே 24-ம் தேதி 'இந்து தமிழ்' இணையதளத்தில் விரிவான செய்தி வெளியானது. அதில், "முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து 'இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 4-ம் தேதி முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக வெளியான செய்தியில், "காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை தினந்தோறும் வெளியிடப்படும் ஊடக அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தப்பட்டது.
20 மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்கள் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளன. அதில், “கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில், 71 பேருக்கு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது.
சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவுடன் காப்பீட்டு அட்டை, ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பித்து தரமான இலவச சிகிச்சை பெறலாம். இது தொடர்பான சந்தேகங்கள், புகார்களுக்குக் கட்டுப்பாட்டு அறையை 0422-1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கோவையில் எந்தெந்தத் தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்தம் 20 மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.