Published : 07 Jun 2021 02:18 PM
Last Updated : 07 Jun 2021 02:18 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ள மருத்துவப் படிப்பு: முதல்வர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை

தமிழகத்தில் 42% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வாய்ப்பே கிடைக்காமல், சிபிஎஸ்இ, தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களே பெறுகின்றனர். எட்டாக்கனியாக உள்ள மருத்துவப் படிப்பை அரசு மாணவர்களுக்கு எட்டும் நிலையை முதல்வர் ஏற்படுத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதைத் தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது. ஆனால், நீட் தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, நீட் தேர்வினால் அரசுப் பள்ளிகளில் படிக்கிற பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், சிபிஎஸ்இ மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிற அநீதி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிவரத்தின்படி கடந்த 15 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் கடும் சோதனைகளைச் சந்தித்து வந்துள்ளனர். கடந்த 2006 முதல் 2016 வரை அரசுப் பள்ளிகளில் படித்த 340 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேருகிற வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதில் விதிவிலக்காக 2007ஆம் ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் படித்த 62 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருகிற வாய்ப்பைப் பெற்றனர்.

ஆனால், 2013ஆம் ஆண்டில் மிக மோசமாக வெறும் 18 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். நீண்டகாலமாக அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேருகிற வாய்ப்பு, இத்தகைய அவலநிலையில்தான் உள்ளது.

2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த 700 மாணவர்களுக்கு நீட் மூலமாக தேர்வு பெற்றிருந்தாலும், இதில் 9 மாணவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. நீட் தேர்வின் காரணமாக அநீதி அதிகரித்ததே தவிர குறையவில்லை.

இந்த அநீதியைப் போக்குவதற்குத்தான் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர 313 மாணவர்களுக்கும், பல் மருத்துவப் படிப்பிற்கு 92 மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. அதாவது, அரசுப் பள்ளியில் படித்த 405 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வை 8.41 லட்சம் பேர் எழுதினர். இதில் 3.44 லட்சம் பேர் (41 சதவிகிதத்தினர்) அரசுப் பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,400 இடங்கள் உள்ளன. தமிழக அரசின் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக மொத்தமுள்ள 3,400 இடங்களில் அரசுப் பள்ளியில் படித்த 405 மாணவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மீதமுள்ள மூவாயிரம் இடங்களில் சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய அநீதியைப் போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதே நேரத்தில் தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே, நீட் தேர்வினால் இழைக்கப்பட்டு வரும் அநீதியைப் போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். நீட் தேர்விற்கு மாற்றாக எந்த அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது என்பது குறித்து வல்லுநர் குழுவை அமைத்து, அவர்களது பரிந்துரையை ஏற்று தமிழகத்தில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அமைந்திட, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x