Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

தமிழகம் முழுவதிலும் கடந்த 12 ஆண்டுகளாக திருப்பணி நடக்காத கோயில்களுக்கு கும்பாபிஷேகம்: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை

தமிழகம் முழுவதிலும் 12 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாத கோயில்களை கணக்கெடுத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வடபழனி முருகன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இங்கு மணமக்கள் உடை மாற்றும் அறை, தங்கும் அறைகள் விரைவில் கட்டப்படும்.

ஆகம விதிகளின்படி..

தமிழகம் முழுவதிலும் 12 ஆண்டுகளாக திருப்பணி நடைபெறாத கோயில்களை கணக்கெடுத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். தீ விபத்து நடந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், ஆகம விதிகளின்படி புனரமைக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகள், அவர்களது உதவியாளர்களுக்கு ஊரடங்கு முடியும் வரை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தொடர்ந்து உணவு பொட்டலங்கள் வழங்கப்படும். சென்னையை பொருத்தவரை உணவுக்கு தட்டுப்பாடு இல்லை. உணவு இல்லாத நிலை ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் ஒரே உறையில் நான்கு, ஐந்து கத்திகள் இருந்தன. தற்போது கருத்து வேறுபாடுகள் இன்றி ஒரே தலைமையில் ஆட்சி நடக்கிறது.

தொற்று பரவலை கட்டுப்படுத்த எதிர் தரப்பினரின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதற்காகவே அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை என அனைத்திலும் அரசு வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x