

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வங்கி வேலை நேரம் வரும் 13-ம் தேதி வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் தமிழ்நாடு வங்கியாளர் குழுமம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழகஅரசு ஊரடங்கை சில தளர்வுகளுடன் வரும் 14-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதையடுத்து, வங்கிகள் வேலை நேரமும் வரும் 13-ம் தேதி வரை குறைக்கப்படுகிறது.
இதன்படி, அனைத்து வங்கிக் கிளைகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிப் பரிவர்த்தனைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல மாலை 5 மணி வரை செயல்படும்.
வங்கிக் கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், மாற்று முறையில் செயல்பட வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளான என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
அதேபோல, அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளையும் வழங்க வேண்டும்.
ஏடிஎம்கள் செயல்பாடு
மேலும், ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திரம் போன்றவை முறையாக செயல்படுவதையும் வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.