இலங்கை வசம் உள்ள 41 மீனவர்கள் 56 படகுகளை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை வசம் உள்ள 41 மீனவர்கள் 56 படகுகளை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Updated on
2 min read

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 41 மீனவர்கள் மற்றும், பறிமுதல் செய்யப்பட்ட 56 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து இயந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் 17-ம் தேதி காலை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

பாக்ஜல சந்தியில் தங்கள் பாரம்பரிய பகுதியில் அமைதியான முறையில் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது துரதிருஷ்ட வசமாக இன்னும் தொடர்கிறது. இதுவரை 41 மீனவர்கள் மற்றும் அவர்களின் 56 படகுகள், இலங்கையின் பிடியில் உள்ளன.

இந்தியா- இலங்கை இடையிலான சர்வதச கடல் எல்லை தொடர்பான வழக்கும், கச்சத்தீவு தொடர்பான 1974, 76ம் ஆண்டு ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆழ்கடல் மீன்படிக்கும் திறனை மேம்படுத்த தமிழக அரசு ரூ.51 கோடியே 30 லட்சம் ஒதுக்கி, சூரை மீன்பிடி படகுகள் வாங்க 50 சதவீதம் மானியமாக ரூ.30 லட்சத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.

மேலும், ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.ஆயிரத்து 520 கோடி மற்றும் ஆண்டு தோறும் கடல் ஆழத்தை பராமரிக்க ரூ.10 கோடிக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக தற்போது வரையில் காத்திருக்கிறோம்.

பண்டிகை காலம் தொடங்கும் நேரத்தில், மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீனவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, நீங்கள் விரைவாக இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை தரப்பில் பேசி மீனவர்களையும், அவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிக முக்கியமான இத்தருணத்தில் மீனவர்களின் பிரச்சினையை முற்றிலும் தீர்க்க மத்திய அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு தமிழக மீனவர்கள் 41 பேர் மற்றும் 56 படகுகள், கடந்த மாதம் 8- ம் தேதி படகு பழுதானதால் இலங்கை கரையில் சிக்கி தவிக்கும் 4 மீனவர்களையும் இலங்கை தரப்பினரிடம் பேசி மீட்க மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கடைசியாக 12ம் தேதி இரவு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து 4 படகுகளில் 24 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கைது செய்த இலங்கை கடற்படை தலைமன்னாரில் சிறையில் அடைத்துள்ளது.

இதுவரை, 78 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 38 படகுகள் இலங்கையின் பிடியில் உள்ளன.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தமிழக மீனவர்கள் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிப்பதில் உள்ள சிக்கல்கள், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கட்டுப்படுத்தப்படும் என நம்பினேன். ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழக மீனவர்களுக்கு எதிரான இது போன்ற துயர சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த விஷயத்தை நான் பலமுறை எடுத்து கூறியும் தங்கள் தரப்பில் இருந்து உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்படவில்லை.

கடந்த 1974 மற்றும் 76ம் ஆண்டுகளில் கையெழுத்தான இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. மேலும், ஒப்பந்தப்படியான சர்வதேச கடல் எல்லை என்பது முடிந்து விட்டவிஷயமாக கருதக்கூடாது என மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா -இலங்கை இடையிலான ஒப்பந்தம் தொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளேன். அதில் கச்சத்தீவு தமிழகத்திற்கு உரியது என்பதையும் வலிறுத்தியுள்ளேன்.

பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடியதாகும். எனவே, இந்திய மீனவர்களின் உரிமையை பாதிக்கும் இந்த விஷயத்தில் மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு வெளியுறவுத்துறை ரீதியாக மட்டுமின்றி உயர்மட்ட அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் இலங்கையுடனான பேச்சுவார்த்தையில் மீனவர்கள் பிரச்சினைக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவே, இலங்கை சிறையில் உள்ள 78 தமிழக மீனவர்கள் மற்றும் 38 படகுகளை விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.ஆயிரத்து 520 கோடி மற்றும் ஆண்டுக்கு பராமரிப்பு தொகையாக ரூ.10 கோடியும் வழங்கும்படி நான் கடந்த ஜூன் மாதம் நான் தங்களை சந்தித்த போது மனு அளித்திருந்தேன். அதற்கான நிர்வாக ஒப்புதலையும் தாமதமின்றி வழங்க வேண்டும்'' என்று ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in