

கவிக்கோ விருதுடன் கிடைத்த ரூ.1 லட்சம் தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு பாவலர் அறிவுமதி வழங்கினார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை மற்றும் தமிழியக்கம் இணைந்து நடத்திய ‘கவிக்கோ விருது விழா’ காணொலி கூட்டமாக நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில், ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கவிக்கோ விருதை பாவலர் அறிவுமதிக்கு தமிழியக்கம் நிறுவனர் தலைவர் கோ.விசுவநாதன் வழங்கி பாராட்டினர்.
இவ்விருதை ஏற்றுக்கொண்ட பாவலர் அறிவுமதி பேசும்போது, ‘‘கவிக்கோ விருது தந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருடன் கவிக்கோவும் இருந்து அவருடைய கையால் இதை பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு பிள்ளையின் வருத்தம், வலி, எனக்குள் இருந்தாலும், அவருக்கு இணையாக வாணியம்பாடி அப்துல் காதர், இக்பால், குடியாத்தம் பதுமனார், சோலைநாதன் இவர்கள் எல்லாம் அய்யாவோடு என்னை பாதுகாத்தவர்கள் இங்கு உள்ளனர்.
என் அப்பா வள்ளுவர் நூலகம் என்ற ஒன்றை வழிநடத்தினார். கடந்த 1949-ல் அவர் உருவாக்கிய அந்தக் கழக கொட்டாயில் இருந்த நூல்கள், நாளிதழ்களும்தான் என்னை வளர்த்தெடுத்தன. திராவிட இயக்கத் தலைவர்கள் பேசிய பேச்சுக்களை கேட்டு காதுகள் வழியே துடித்த தமிழ்தான் இன்றைக்கு நான் எழுதுகிற தமிழாக கசிகிறது.
தமிழ்நாடு என்று சொல்லாதே என்று சொல்லுகின்ற சூழலில், அதை எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும், எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும் என்ற சூழலில் இந்த விருதைப் பெறுகிறேன். இந்த ஒரு லட்சம் ரூபாய் தொகையை முதல்வர் பெருந்தொற்று நிதிக்கு வழங்குகிறேன்’’ என்றார்.