Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

சென்னை மீனம்பாக்கம் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை 108 பேர் பூரண குணமடைந்துள்ளனர்: ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாய் சதீஷ் தகவல்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுப் பயிற்சி அளிக்கும் சித்த மருத்துவர்.

ஆலந்தூர்

சென்னை மீனம்பாக்கம் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், கரோனாவுக்கு பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையில் 108 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்று இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாய் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல் அலையைவிட, 2-வது அலையால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதுடன், ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேரிட்டது. ஆக்சிஜன் படுக்கை வசதியை மேம்படுத்தியது போன்ற துரித நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சித்தா, ஆயுர்வேதம் போன்ற உள்நாட்டு மருத்துவ சிகிச்சைகளுக்கு மக்களிடம் தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கென, 70 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம், கடந்த மே 11-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு மையத்தில் 24 மணி நேரமும் 7 மருத்துவர்களின் சுழற்சி முறையிலான கவனிப்பும், இலவச சித்த மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, புல்தைலம் கலந்த நீரில் ஆவி பிடிப்பது, சித்தா மூலிகை மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து, காலையில் கபசுர குடிநீர், மதியம்நேச்சுரோபதி முறையில் தயாரிக்கப்பட்ட இம்யூனிட்டி பூஸ்டர், மாலையில் மூலிகை டீ, இரவு நேரத்தில் உணவுடன் கூடிய சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.

தொடர்ந்து, 5 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஆர்.டி.பி.சி.ஆர்.,முறையில் கரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் நெகட்டிவ் என்று வந்தால், உடனே டிஸ்சார்ஜ் செய்யப்படுவர். இதுவரை இம்மையத்தில், 108 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஏ.எம். ஜெயின் கல்லூரியின் சித்த மருத்துவ மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாய் சதீஷ் கூறியதாவது:

இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தினமும் கபசுர குடிநீர், அமுக்ரா மாத்திரை, தாளிசாதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஆடாதொடை மணப்பாகு வழங்கப்படுகின்றன.

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு, ஓமக்குடிநீர் சூரணமும், நொச்சி குடிநீர் சூரணமும் கலந்த கஷாயம் தினமும் காலை, மாலை வழங்கப்பட்டு வருவதால் அவர்கள் குறுகிய நாட்களில் குணமடைகின்றனர்.

இந்த மையம் தொடங்கப்பட்ட 23 நாட்களில் (நேற்று வரை மட்டும்) 108 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது, 24 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகள், வீட்டில் 5 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

அவ்வாறு செல்லும் நோயாளிகளுக்கு, அமுக்ராசூரணம் மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், கபசுர குடிநீர் அடங்கிய ஆரோக்ய கிட் வழங்கப்படுகிறது.இதுவரை, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் யாருக்கும் பக்கவிளைவுகளோ, வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து குணமடைந்தவர்களில் சிலர் கூறியதாவது: சித்த மருத்துவ முறையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் போல மருத்துவர்கள் எங்களிடம் அன்பாக சிறப்பான சிகிச்சை அளித்தார்கள். நடைப் பயிற்சி, யோகாசனம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு இயற்கை சார்ந்த முறையில் சிறப்பாக கவனித்ததால், நாங்கள் விரைவில் குணமடைந்தோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x