திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்ட பேக்கரி.
திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்ட பேக்கரி.

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் பேக்கரியை சேதப்படுத்திய திமுகவினர் கைது

Published on

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் வாடிப்பட்டியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது சகோதரர் அசோக்குமார்(35) அப்பகுதியில் மரக்கன்றுகள் விற்பனை செய்யும் நர்சரி வைத்துள்ளார்.

இவர் அருகே உள்ள ஊரில் கடந்த 3-ம் தேதி நடந்த நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது, அசோக்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதே விழாவில் பொட்டுலுபட்டி அசோக்குமார்(28), அவரது தம்பி சுபாஷ், சோழவந்தான் சங்ககோட்டை பெரியமருது(24), கீழநாச்சிகுளம் பிரகாஷ், கரட்டுப்பட்டி அறிவுச்செல்வம்(19), கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள், ‘எங்களுக்கு முன்னால் கால்மேல் கால் போட்டு உட்காரக் கூடாது’ என, அசோக்குமாரை கண்டித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த முன்விரோதம் காரணமாக பொட்டுலுபட்டி அசோக்குமார் உட்பட 6 பேரும், வாடிப்பட்டியில் உள்ள இளங்கோவனின் பேக்கரிக்கு சென்று அவரிடம் தகராறு செய்து அடித்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸார் பொட்டுலுபட்டி அசோக்குமார், பெரியமருது, அறிவுச்செல்வம் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது:

போடிநாயக்கன்பட்டி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில் அதிமுகவைச் சேர்ந்த வாடிப்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சோனையின் மகனும், போடிநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவருமான அசோக்குமார் பங்கேற்றார்.

அந்த விழாவுக்கு வாடிப்பட்டி பேரூர் திமுக முன்னாள் செயலர் பால்பாண்டி, இளைஞர் அணி துணைச் செயலர் பொட்டுலுபட்டி அசோக்குமார் உள்ளிட்ட திமுகவினரும் சென்றுள்ளனர். அப்போது, பால்பாண்டி உள்ளிட்ட திமுகவினரை மதிக்காமல், கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்ததாக அவர்கள் அதிமுகவைச் சேர்ந்த அசோக்குமாருடன் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில், பால்பாண்டி ஆதரவாளர்களான பொட்டுலுபட்டி அசோக்குமார், சுபாஷ், பிரகாஷ்,அறிவுச்செல்வம் உள்ளிட்ட 6 பேர்இளங்கோவனின் பேக்கரியை நேற்று முன்தினம் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

பால்பாண்டிக்காக அவரது ஆதரவாளர்கள் பேக்கரியை சேதப்படுத்திய போதிலும், புகாரில் பால்பாண்டி பற்றி குறிப்பிடாததால் நாங்கள் அவரை விசாரிக்கவில்லை. சம்பவம் தொடர்பாக மூவரை கைது செய்துள்ளோம். மற்ற 3 பேரை தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in